சாந்தி வீட்டுக்கார்! - 4

சாந்தி வீட்டுக்கார்! - 4
====================
முன்கதை சுருக்கம்!
மன்னன் சாந்தியோட பாட்டிக்கு மரியாதை தெரியலன்னு சொல்ல... சாந்தி மன்னனோட குடும்பத்து வரலாற இழுக்க....அப்படியே தூங்கி போனான் புது மாப்பிள்ளை!
கனவுல சாந்திய ஒருதலையா காதலிச்ச நாட்கள் வருது...ரொம்ப நாள் போராட்டத்துக்கு அப்புறம் சாந்தி மொதமொதல்ல இவன பார்த்து சிரிக்கிது...

இனி!

கனவுல சாந்தி இவன பார்த்து சிரிச்சதும் தலை கால் மட்டும் இல்ல, சைக்கிள்ள பெடல் எது பெல் எதுன்னும் புரியல...
பெடல மிதிக்கிறதுக்கு பதிலா பெல்லை விடாம அடிக்கிறான்...!
அந்த பெல் சத்தத்துல தூங்கிகிட்டு இருந்தவனுக்கு முழிப்பு வந்துடுச்சி! நிஜத்துல பால்கார் வாசல்ல பெல் அடிச்சிகிட்டு இருக்காரு!

முழிச்சி பார்த்தவனோட  மனசுக்குள்ள நேத்து நடந்தது முழுக்க படமா விரியுது..சாந்தி சொல்லிக்கிட்டு இருந்த இவன் குடும்பத்து வரலாறு ஓடுனப்போ பயத்துல யோசிக்கிறான்...தூங்குற மாதிரி நடிச்சி இன்னும் கொஞ்ச நேரம் தப்பிக்கலாமான்னு!
எவ்வளவு நேரம் நடிச்சாலும் முழிச்சி தான் ஆகணும்ங்குற  நிதர்சனம் புரிஞ்சிடுச்சி...எழுந்துட்டான்.

சாந்தியோட அம்மா, மாப்பிள்ளை வீட்டு பழக்கத்துலேயே  செஞ்சிடுங்கன்னு சொல்லிட்டாலும் அவுங்க மனசுக்குள்ள ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்யிது. அந்த வருத்தம் அவுங்களுக்கே தெரியாம ஒரு கோவத்த வெதைக்கிது!
வெளிக்காட்டாத வருத்தம், கோவத்துல முடியும். வெளிக்காட்டுன கோவம் இன்னொரு வருத்ததுல முடியும்!
அம்மா மனசு ஒரு மாதிரி பொண்ணு மனசு இன்னொரு மாதிரி இருக்குமா? சாந்தி மனசுலயும் கோவம் கொழுந்து விட்டு எரியிது... நேரம் பார்த்து விடியிறதுக்கு காத்துகிட்டு இருக்கு மன்னன் தலை மேல.

ஒரு வழியா நாள் குறிசசிட்டாங்க தாலி பிரிச்சி கோக்குறதுக்கு. குறிச்ச நாளும், படையும், பட்டாளமும் வந்துடுச்சி!
வீடே வழியிது சொந்தகாரங்க கூட்டத்துலயும், சாமந்தி பூ வாசத்துலயும்.

அமைதியா அவுங்க அவுங்க கொண்டு வந்த உருவ(உரு) சாந்தி தாலியில கோக்குறாங்க ஒவ்வொருத்தரா. மொத்தம் எத்தன உரு தேறுதுன்னு ஒரு கும்பல் கணக்கு போட்டுக்கிட்டு இருக்கு.
21 தாண்டி போய்கிட்டு இருக்கு கணக்கு.   லட்சுமி, அன்னாசிப்பூ, வாழைசீப்பு, திராட்சை கொத்து...ன்னு அழகழகா இருக்கு உரு.

முடிஞ்சிது கடமை. வந்த வேலைக்கு தயாராகுது கூட்டம். சாப்பாடு.
நடக்கப்போற களேபரம் தெரியாம மன்னன் யோசிச்சிகிட்டு இருக்கான்.
நூறு வடை தான் சொன்னோம்...நூத்திபத்து பேரு கிட்ட வந்துட்டாங்களே..மொத பந்தியிலேயே நாம சாப்டுடனும்! 
ஆனா எடம் கெடைக்கல. மொத பந்தி சாப்புட ஆரம்பிச்சிடுச்சி. இவன் பறிமாறிகிட்டு இருக்கான்.

இப்பல்லாம் யாரும் முன்னால மாதிரி சாம்பார்ல உப்பு கம்மி ரசத்துல புளி அதிகம்னு உப்பு சப்பு இல்லாத விஷயத்த எல்லாம் பேசி விவகாரம் பண்றது இல்லை.
வயிறு முட்ட சாப்டுட்டு பல் குத்திகிட்டே வந்து உக்காருவான்.
உக்கார்ந்தவன்...அந்த கேலண்டர எதுக்கு அங்க மாட்டி வச்சி இருக்கீங்கன்னு கேப்பான்.
அந்த ஒரு வரி, சீமை வரைக்கும் வேலை செய்யும்.
அப்படி தான் கேட்டான் ஒருத்தன் சாப்டுகிட்டு இருக்கப்போ. ஏன்டா மாப்ள அந்த கேலண்டர ஜன்னலுக்கு பக்கத்துல மாட்டி இருக்கீங்க... சரியாவே தெரியலையே!
மன்னன் பதில் சொல்றான்... சாந்தியோட அப்பா தான் யாரோ குடுத்தாங்கன்னு வாங்கிட்டு வந்தாரு...ஒன்னுத்துக்கும் ஒதவலை...ராவுகாலம் எமகண்டம் இல்ல...ராசிபலன் இல்ல..எடத்த தான் அடைக்கிது!
வாய் அவனோட வடைக்கு வேட்டு வச்சிடுச்சி!

காத்துகிட்டு இருந்த சாந்தியோட கோவம், சபைன்னும் பாக்காம பொங்குது... வீட்டோட மாப்பிள்ளையா வந்த நீங்க கூட தான் ஒன்னுத்துக்கும் ஒதவாம இருக்கீங்க அதுக்கு என்ன பண்றதுன்னு கேட்டுடுச்சி!

மன்னனுக்கு அது கேள்வியா பதிலான்னு புரியல...முழிக்கிறான்...!
அதிகம் யோசிக்காம அமைதியா சாப்பிட போறான்...பாவம், பசிக்கிது!

களேபரம் எல்லாம் முடிஞ்சி எல்லாரும் கிளம்பிட்டாங்க. சாந்தி மட்டும் சாப்பிடாம இருக்கு. கோவத்துல அப்படி கேட்டுட்டாலும் மனசு கேக்கல! மன்னனை பார்த்து அழுவனும் போல இருக்கு. எங்க இருக்கான்னு தேடுது.
அவன் அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி மாடியில ஆணி அடிச்சிகிட்டு இருக்கான்! 
இவனுக்கு நாம என்னத்த சொல்லி புரியவைக்கிறதுன்னு சாந்தி அடுத்த வேலைய பாக்க போகுது.

ராவும் பகலுமா, நாளும் கெழமையுமா... கல்யாணமாகி மூணு மாசம் ஓடிடுச்சி!
ஆமா அதே தான்! சாந்தி முழுகாம இருக்கு!!

வெகுளியா இருக்கான், பச்சை மன்னா இருக்கான், இடிச்ச புளி மாதிரி இருக்கான்னு நெனச்சிகிட்டு இருந்த ஊருக்கு, பய காரியத்துல கண்ணா இருந்து இருக்கான்னு நிரூபிச்சிட்டான்!

ரெண்டு குடும்பத்துக்கும் சந்தோஷம் தாங்கல. மாறி மாறி குலதெய்வ கோயிலுக்கு பொங்க வச்சி காணிக்க குடுத்ததுல பூசாரி ஒரு அள்ளு அள்ளிட்டான். அந்த சந்தோஷத்துல இன்னும் ரெண்டு மாசத்துல அவன் வீட்டுல நல்ல சேதி வந்தாலும் வரும்!

சாந்திக்கு சந்தோஷம், அதைவிட பெரிய நிம்மதி. இந்த மூனுமாசத்துலையே போறவரவங்க எல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க...எதுவும் விசேஷம் இல்லையான்னு. ஊர் வாய அடச்சிடலாம் இனிமே!

நம்ம ஆளுக்கு இன்னும் சரி வர புரியல அவனோட சாதனை என்னன்னு! இப்பவும்... போறான் வரான் சாப்பிடறான் தூங்கறான்...எப்பவாவது சாந்திய கேக்கறான்...உனக்கு ஏன் இன்னும் வயிறு சின்னதாவே இருக்குன்னு! அதோட முடியுது அவனோட கடமை!

இன்பமும் துன்பமும் மாறி மாறி வர்றது ஏட்டுல இருக்குற வாழ்க்கை.
நிஜத்துல, வாழ்க்கை எப்பவும் துன்பமா இருக்கும், நடுவுல... துன்பத்தை கீழ அழுத்தி இன்பம் கொஞ்ச நேரத்துக்கு எட்டிபார்த்துட்டு மறைஞ்சிடும்.
இப்போ இவங்க வாழ்க்கைல இன்பம் எட்டி பாக்குது...
பார்த்த வரைக்கும் போதும் நீ கிளம்புன்னு சொல்லி கீழ இருந்தவன் மேல வர ஆரம்பிக்கிறான்!

வளரும்!

எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு

No comments:

Post a Comment