சாந்தி வீட்டுக்கார்! - 6

சாந்தி வீட்டுக்கார்! - 6
====================
வரப்போற புருஷன் எப்படி இருக்கணும்னு யோசிக்கிறாங்களோ இல்லையோ, தனக்கு பொறக்கப்போற குழந்தை எப்படி இருக்கணும்னு யோசிக்காத பொண்ணுங்களே இந்த உலகத்துல இல்லை!

ரெண்டு வயசுல மரப்பாச்சி பொம்மைக்கு பேரு வச்சி, தலை சீவி, பொட்டு வைக்கிரப்பொவே மனசளவுல அம்மா ஆயிடறாங்க!

சாந்தி, தான் முழுகாம இருக்கோம்னு தெரிஞ்சதுல இருந்து அதோட உடம்ப உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிடுச்சி.
சின்னதா கால்ல நரம்பு இழுத்தாலும் அந்த வலி, வயித்துல இருக்க குழந்தைக்கு எதுவும் பண்ணுமான்னு பயப்படுது.
உக்காரும்பொழுதும் எழுந்துக்கும்பொழுதும் கை வயிறை புடிச்சிக்கிது, மனசு வயித்துல இருக்க குழந்தைய புடிச்சிக்கிது!
சாப்பாடு எதுவும் சாப்பிட முடியல, வயிறு காலியா கெடக்கு ஆனா மனசு பூரா நெறஞ்சி இருக்கு.
எழுந்து நாலு அடி நடக்க தெம்பு இல்லை ஆனா கருவுல இருக்க சிசுவுக்கு பொழுதன்னைக்கும் தாலாட்டு பாடிகிட்டு இருக்கு.
அம்மா, அப்பா, சொந்தகாரங்க, மன்னன், அத்தனைபேரும் இப்போ அன்னியமா போய்ட்டாங்க.
எப்பவும் தூங்கிகிட்டு இருக்க குழந்தை கூட பேசிகிட்டு இருக்கணும்னு தோணுது.

இது எல்லாம் மருத்துவச்சி அந்த சேதிய சொல்றவரைக்கும்!
கேட்டதுக்கப்புறம், இனி இடியே தலைமேல எறங்குனாலும் தாங்கிடலாம்னு தோனுற அளவுக்கு வலிக்குது மனசு.
எப்பவும் தயாரா இருக்க அழுகையும், வந்துடவான்னு கேக்குற கண்ணீரும் இன்னும் காணோம்.
சாந்திய போலவே அதுங்களுக்கும் இப்போ என்ன செய்யணும்னு தெரியல.

கண்ணு, செவுத்துல இருக்க விரிசல பார்த்துகிட்டு இருக்கு. மனசு, பிரிய போற சிசுவ நெனச்சி அழுதுகிட்டு இருக்கு.
கண்ணும் மனசும் வேற வேற வேலைய செய்யிறது சாந்திக்கு இதுதான் முதல்முறை!

சாந்தி இப்படி வெறிச்சி பார்த்துகிட்டு இருக்குறத பார்த்ததும் அம்மாவுக்கு பயம் வந்துடுச்சி.
அடியே, அழுதுடுடி, மனசுலையே வச்சிக்காத. உனக்கு ஏதாவது ஆகிட போகுது.
அம்மா சொன்னதையே திரும்ப திரும்ப நாலு முறை சொல்றாங்க.

நாம அழுதா அது குழந்தைய என்ன செய்யுமோன்னு சாந்தி அமைதியா இருக்கு.
தான் பெத்தது பத்தி ஒரு அம்மாவும், தான் சுமக்கிறது பத்தி இன்னொரு அம்மாவும் கவலைப்பட்டுகிட்டு இருக்காங்க.

மன்னன் எல்லாருக்கும் காப்பி வாங்க போய்ட்டான்.  
மருத்துவச்சி மறுபடி வந்து, கலைக்கலன்னா பெரிய உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதும், எல்லாரும் பேசி முடிவு பண்ணிட்டாங்க... கலச்சிடலாம்னு.

உள்ள கூட்டிகிட்டு போய்ட்டாங்க சாந்திய. வெளிய போனவன் திரும்பி வரான் காப்பியோட.
விஷயத்த சொல்றாங்க... மாமியார் மருமகனுக்கு... தலைய ஆட்டிக்கிறான்.

எல்லாம் முடிஞ்சிது. ஒரு வாரம் ஆஸ்பத்திரி வாசமும் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டாங்க.

ஜனங்க எல்லாம் நாளுக்கு ஒரு குடும்பமா துக்கம் விசாரிக்க வராங்க. முகம் என்னவோ நல்லவங்க மாதிரிதான்
வச்சிருக்காங்க ஆனா சொல்ற வார்த்தைங்க எல்லாம் அதுக்கு நேர்மாறா இருக்கு.

அரடாப்பட்டுல இருந்து வந்த செல்லாத்தா சொல்லுது,
நம்ம மனியக்கார் பொண்ணுக்கு கூட இப்படி தான் ஆயிடுச்சி. கலச்ச அப்புறம் ஒரு மாசம் நல்லா தான் இருந்தது. எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க. அப்புறம் அதுக்கு பேய்புடிச்சி சுயநலம்(நினைவு) இல்லாம போய்டுச்சி! பார்த்து பதுசா இருந்துக்க ஆத்தா!

செல்லாத்தா, பேய் வேற, வந்தவங்க வேறன்னு நெனச்சிகிட்டு இருக்கு!

அடுத்த குடும்பம் வருது, அதுவும் அதோட கடமைய தவறாம செய்யிது.
பால்கார் நாயக்கரு பேத்திக்கு கூட இப்படி தான் ஆயிடுச்சி. அம்மன்கோயில் பூசாரிகிட்ட மைதடவி பார்த்ததுல முன்னோருங்க சாபம் தான் காரணம்னு சொல்லி, அவ வூட்டுக்காரன் கரகம் எடுத்து நிவர்த்தி செஞ்சாங்க!

எல்லாத்தையும் கேட்ட சாந்தியும் அம்மாவும் நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. சமுதாயம் அதோட சோலிய சரியா செஞ்சி முடிச்சிடுச்சி.
அடுத்த மூணு மாசம், கோயில் கொளம் பூசாரி மந்திரிப்புன்னு கழியுது. இந்த சாக்குல புருஷன் பொண்டாட்டி நடுவுல இருந்த இடைவெளி தண்ணி ஊத்தாமலே வளர்ந்துடுச்சி!

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை வருது. பேசத்தெரியாதவன்னு  நெனச்ச மன்னன் தேறிக்கிட்டு வரான். பெரும்பாலான சண்டைக்கு காரணம் நம்ம ஆளோட தேற்ச்சி தான் காரணமா இருக்கு.

யாருகிட்ட இருந்து கத்துகிட்டான்னு தெரியல, ஒரு நாள் சண்டைய போட்டுட்டு அம்மாவ பெத்த தத்தா ஊருக்கு போய்ட்டான் சொல்லாம கொள்ளாம!

சண்டை அதிகமாக அதிகமாக நிம்மதி கொறையுமா இல்லையா? கொறஞ்சிடுச்சி.
இப்போ சாந்தியோட மனசு சந்தோஷமான விஷயங்கள தேடி அலையிது.

கல்யாணமானவங்களுக்கு  சந்தோஷமான விஷயங்கள் எல்லாமே கல்யாணத்துக்கு முன்னாடி தான் நடந்து இருக்கும்!
சாந்திக்கும் அப்படிதான்! மன்னன காதலிச்ச நாட்கள் ஞாபகம் வந்துடுச்சி!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக். மு