சாந்தி வீட்டுக்கார் - 3

சாந்தி வீட்டுக்கார் - 3
===================

வாசல் தெளிக்க போன சாந்தியோட அம்மாவுக்கு பெரியப்பாவோட கோலத்த பார்த்ததும் அதிர்ச்சியாயிடுச்சி.
அத மறைச்சிகிட்டு... வாங்க...மொதல்ல உள்ள வாங்க னு கூப்பிடவும் வந்த கும்பல் முனுமுனுத்துகிட்டே வீட்டுக்குள்ள போய்டுச்சி.
வந்தவங்களோட முகத்துல விவகாரம் பண்ண வந்து இருக்கோம்னு தெளிவா எழுதி இருந்தது. சாந்தியோட அம்மா படிக்க தெரிஞ்சவங்க...அத படிச்சிட்டாங்க!
கும்பல்ல ஒன்னு பேச ஆரம்பிக்கிறப்போவே அம்மா சொல்லிட்டாங்க..நாங்களும் எங்க வீட்டு பெரியவங்க கிட்ட கேட்டோம்...மாப்ள வீட்டு பழக்கத்துல செய்யிறது தான் சரின்னு சொல்லிட்டாங்க. அதனால உங்க விருப்பம் எதுவோ அப்படியே செய்ங்க..
இத கேட்டதும் பெரியப்பாவுக்கு மனசுக்குள்ள மத்தாப்பு...முகத்துல எந்த மாற்றமும் தெரியல...மீசை மறைக்கிது.

இங்க நடக்குறது எதுவுமே தெரியாம நம்ம ஆளு உள்ள தூங்கிகிட்டு இருக்கான். அது பத்தாதுன்னு கனவு வேற. சாந்திய ஒரு தலையா காதலிக்க ஆரம்பிச்ச காலத்த எட்ட நின்னு பார்த்துகிட்டு இருக்கான்.
எவ்வளவு மோசமான ஆணும் வாழ்க்கைல ரெண்டு சமயங்கள்ல  நல்லவனா இருப்பான். ஒன்னு கருவுல இருக்கப்போ இன்னொன்னு காதல்ல இருக்கப்போ! 
காதலிக்கிறப்போ மற்ற உலக சுகங்கள் எதுலயும் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. முழிச்சிகிட்டு இருக்க நேரம் முழுக்க அந்த பொண்ணையே நெனச்சிகிட்டு இருப்பான். தூங்க வேண்டிய நேரம் முழுக்க முழிச்சிகிட்டே இருப்பான்!

எப்பவும் தியான?! நிலைலயே  இருக்குறதுனால அவனை சுத்தி ஒரு ஒளி வட்டம் தெரிய ஆரம்பிச்சிடும். "நான் ஏன் பிறந்தேன்" னு மட்டும் தோணாது மத்தது எல்லாம் தோணும்.

மன்னனும் சாந்தியும் ஒரே டீச்சர் கிட்ட ட்யூஷன் படிச்சாங்க. மொத வேலையா சாந்தியோட சைக்கிள் எது... செருப்பு எதுன்னு தெரிஞ்சி வச்சிகிட்டான்!
ட்யுஷனுக்கு அவனோட ஓட்டை சைக்கிள்ள தான் போவான். சாந்தியும் சைக்கிள்ள தான் வரும். பெரும்பாலும் சாந்தி பின்னாடி தான் போவான். சாந்தி முன்னால போற மாம்பழம் வண்டி ஒதுங்குறதுக்கு பெல் அடிச்சா இவன் ஓரமா போய்கிட்டு இருக்க மாட்டு வண்டிக்கு அடிப்பான்.
சாந்தி ரோட்ல திரும்புறதுக்கு கைகாமிக்கிற அழக ரசிச்சிகிட்டே இவன் கைகாட்டாம திரும்புவான். பின்னால வரவன் இவன் குடும்பத்தையே வார்த்தைங்களால ஒரு உலுக்கு உலுக்குவான்!

சில நாள் சாந்தி சீக்கிரமே கிளம்பி போய்டும். முன்னால சாந்திய காணோம்னா பதறிடுவான்...புலிப்பாய்ச்சல்ல ட்யுஷன்க்கு போய்  வாசல்ல சாந்தியோட சைக்கிள் நின்னுகிட்டு இருக்கான்னு பாப்பான். இருந்ததுன்னா மனசுக்குள்ள ஒரு பாட்டு போட்டுவிட்டுட்டு மாடிப்படி ஏறி மேல போவன்..மாடில தான்  ட்யுஷன் நடக்கும். சைக்கிள் இல்லன்னா பாட்டு ஓடாது...அவன் மனசு தான் தாறுமாறா ஓடும்...ஒரு வேலை சாந்தி சைக்கிள் பஞ்சரா...இல்லை அதோட ஆயாவுக்கு எதுவும் உடம்பு முடியலையா...ஊர் திருவிழா கூட அடுத்த மாசம் தான...இப்படி என்ன என்னவோ தோணும்...ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கையோட மேல போய் செருப்பு இருக்கான்னு பாப்பான். இப்போ அவன் உயிரு இருக்குறது அந்த செருப்பு இருக்குறத பொருத்தது.

பசங்களுக்கு பொதுவா பொண்ணுங்களோட கூந்தல் மேல ஆர்வம் இருக்காது...வெள்ளிகிழமையானா காலைல எட்டு மணிக்கு மொட்டைமாடிக்கு அந்த பொண்ணு தலை துவட்ட வரும்...னு தெரிஞ்சிக்கிறது தான் அதிகபட்சம்!

ஆனா இவன், ட்யுஷன்ல தலைய வலப்பக்கமா சாச்சி உக்கார்ந்துருக்க சாந்தியோட பின்னல் போட்ட முடி அது எழுதிகிட்டு இருக்க நோட்டு மேல பாம்பு மாதிரி ரெண்டு சுத்து சுத்தி படர்ந்து இருக்குறதையும்..எழுதுறத மறைக்கிதுன்னு சாந்தி அந்த முடிய இடப்புறமா தூக்கி போட்டா அது பக்கத்துல இருக்க பொண்ணோட இடது தோள்மேல பட்டு சரியிறதையும் குறிச்சி வச்சிக்கிறான். எதுக்குன்னு தெரியல. ட்யுஷன் முடியுது.

சாந்தியும் அதோட படிக்கிற இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் ஒண்ணா தெரு முனை வரைக்கும் பேசிக்கிட்டே வந்து பிரிஞ்சி போவாங்க.
அன்னைக்கி பேச்சு சமையல பத்தி.
சாந்தி சொல்லுது..குழம்பு கெட்டியா இருக்க ஏதோ மாவு கலக்கனும்னு எங்க பாட்டி சொன்னாங்க...என்ன மாவுன்னு மறந்துட்டேன்..
இன்னொரு பொண்ணு...எங்க அம்மா வெள்ளையா ஒரு மாவு கலப்பாங்க...அரிசி மாவுன்னு நெனைக்கிறேன்!.
வெள்ளையான்னா... ஒருவேளை கோலமாவா இருக்குமா?! மூணாவது பொண்ணு அதோட பாண்டித்யத்த காட்டுது!

பிரியிற இடம் வந்துடுச்சி. போயிட்டு வரேன்னு சொன்ன சாந்தி பின்னால வர மன்னனை பார்த்து முதல் முறையா சிரிக்கவும்....
அவன் மனசுக்குள்ள பட்டாம்பூச்சில இருந்து பருந்து வரைக்கும் பறக்குது!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு


சாந்தி வீட்டுக்கார்! - 2

சாந்தி வீட்டுக்கார்-2
==================
எப்பவும் கஷ்டத்தையே நெனச்சி கஷ்டத்துலையே வாழ பழகிட்ட மனுஷனுக்கு ஒரு வடிகால் வேணும்னு நெனச்சி தான் நம்ம  முன்னோருங்க பண்டிகை, சுபவிசேஷம் எல்லாம் அமைச்சிவச்சது.

விடுவானா பின்னால வந்தவன்?  அதுலயும் ஒரு வில்லங்கத்த சேர்த்துவிட்டுட்டான். வில்லங்கத்துக்கு பேரு "குடும்ப பழக்கம்".
நல்லதோ கெட்டதோ எல்லாத்துலயும் நம்ம குடும்ப பழக்கம்னு ஒன்ன சொல்லி அதுபடி நடக்கலன்னா தெய்வகுத்தம் ஆயிடும்னு நம்ப வச்சிட்டான்.
ஆரம்பத்துல எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தது. காலபோக்குல ஊருக்கு ஊரு மாறி, தெருவுக்கு வந்து, இப்போ வீட்டுக்கு வீடு மாறி போச்சி குடும்ப பழக்கம்.

எப்புடி அடுத்தடுத்த வீட்ல வைக்கிற சாம்பார் வேறவேற மாதிரி மணக்குமோ அப்புடி மணக்க ஆரம்பிச்சிடுச்சி அவுக அவுக பழக்கம்.

மன்னனுக்கும் சாந்திக்கும் கல்யாணம் முடிஞ்சிதா...இப்போ சாந்திக்கு தாலி பிரிச்சி கோக்குற சுபநிகழ்ச்சி நடத்த நாள் குறிக்க போறாங்க.
கூடிருச்சி சொந்தபந்தங்க சாந்தி வீட்டுல.

சொந்தங்களை தவிர ஒரு நாலு தெரு ஆளுங்களும் வந்துட்டாங்க. இந்த நாலு பேரும்  யார் வீட்ல என்ன அலுவல்னாலும் தவறாம ஆஜர் ஆயிடுவாங்க. இவங்க என்ன வேலை செய்யிறாங்க,  எப்போ வேலைக்கு போறாங்க, எப்படி சம்பாதிக்கிறாங்க எதுவும் யாருக்கும் தெரியாது. அது பரவாயில்ல... இவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு புரிஞ்சிக்கவே முடியாது பாருங்க...அது தான் பெரிய தலைவலி.

நாலுல ஒருத்தர் வந்த வேலைய ஆரம்பிக்கிறாரு!
மசமசன்னு பேசிக்கிட்டு இருந்தா நாங்க எப்போ வேலைக்கு?! போறது.
சட்டுபுட்டுனு தேதிய குறிங்கப்பா. சாந்தி...போய் எல்லாருக்கும் காப்பி கொண்டாம்மா!

சாந்தி காப்பி போட உள்ள போய்டுச்சி.
இப்போ சாந்தியோட அம்மா ஆரம்பிக்கிறாங்க. எங்க பழக்கம் மூணாம் நாலு பண்றது தான். இல்லன்னா மூணாம் மாசம் பண்ணலாம். உங்களுக்கு எது வசதியோ அப்படி செஞ்சிக்கங்க.

சொன்னதும் தாவி வராரு மன்னனோட பெரியப்பா. எங்க பழக்கம் அஞ்சாம் நாலு பண்றது தான். அஞ்சாம் நாலு தான் சரி.
என்னடா பொம்பளைங்க சமாச்சாரத்த ஆம்பள பேசுறாருன்னு யாரும் நெனைக்கல...அவரு தான் குடும்பதுலையே மூத்தவரு.

மூனும் வேணாம் அஞ்சும் வேணாம்...ஏழாம் நாலு வச்சிக்கங்க...எழறைய கூட்டுது...காப்பி கேட்ட நாலுல ஒன்னு!

எல்லாரும் விட்டத்துல ஒட்டடை எதுவும் இருக்கானு பார்த்துகிட்டு இருக்காங்க...பேறமைதி..!
சாந்தி காப்பியோட வந்துடுச்சி...எல்லாரும் அடிச்சிக்காம ஆளுக்கு ஒரு கோப்பைய எடுத்துகிட்டாங்க.

பெரியப்பா சொல்றாரு, கல்யாணம் முடிஞ்சிட்டா எல்லா சடங்கும் மாப்பிள்ளை வீட்டு பழக்கப்படி தான் நடக்கனும்னு நாஞ்சொல்லவேண்டியதில்ல..அஞ்சாம் நாள் வியாழகிழமைல வச்சிடுவோம். என்னப்பா நான் சொல்றது?

சாந்தியோட அம்மா மறுத்து பேசுறாங்க.
மத்த எல்லாம் உங்க வழக்கப்படி தான் நடக்கணும்.
ஆனா இது சாந்திக்கு செய்ற சடங்கு...பால்காரம்மா பொண்ணுக்கு கூட அவுங்க பழக்கப்படி தான் செஞ்சாங்க அதனால எங்க பழக்கப்படி செஞ்சிடுவோம்.

எங்கடா நமக்கு வேலை இல்லாம போய்டுமோன்னு பயந்துக்கிட்டே இருந்த நாலுல ரெண்டாவது ஆளு முன்னால வராரு. இந்தாம்மா தங்கச்சி... அப்படி பண்ண கூடாது. காலத்துக்கும் நம்ம புள்ளைங்க நல்லா இருக்கனும்ல.... பேசாம அவரு சொல்றத கேளு. நல்லது தான் சொல்லுவாரு. கோளாறு சொல்லிட்டு காப்பிய ஒரு உறி உறிஞ்சிக்கிறாரு!

இல்லிங்கன்னாச்சி அது சரி படாது. கல்யானத்துலையே நெறைய நாங்க அவுங்க இஷ்டப்படி செஞ்சிட்டோம். எங்க உறவுக்காரங்க எல்லாருக்கும் எங்களால பதில் சொல்ல முடியாது. ஒரே தீர்மானம், இந்த சடங்க எங்க பழக்கப்படி தான் பண்ணனும்.

இந்த முறை யாரும் ஒட்டடைய பாக்கல...வாசல பாக்குறாங்க.
அப்போ இனிமே நாங்க சொல்ல என்ன இருக்கு...நீங்களா பேசி ஒரு முடிவு செஞ்சிட்டு..தேதிய சொல்லுங்க வந்து வாழ்த்திட்டு போறோம்...அதான் செய்ய முடியும் வேற என்ன பண்ணமுடியும்! இது நாலுல நாலாவது!

மேற்கொண்டு எது பேசுனாலும் விவகாரமா போய்டும்னு எல்லாருக்குமே தெரிஞ்சிடுச்சி. வந்த தடம் தெரியாத மாதிரி கெளம்பி போய்ட்டாங்க எல்லாரும். பேறமைதி!

மன்னனும் சாந்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குறாங்க. சாந்தி பாக்குற பார்வையோட அர்த்தம் மன்னனுக்கு புரியல.
இவங்க ரெண்டு பேர வச்சி இருபது பேரு விளையாடிகிட்டு இருக்கிறது ரெண்டு பேருக்குமே தெரியல!

இந்த கூத்த பாக்க வந்த சூரியனும் செத்த நேரத்துல கெளம்பி போய்ட்டான். இருட்டிடுச்சி.
சாந்திக்கு அவ்வளவா பசிக்கல ஆனா மன்னன் ஒரு கொறையும் வைக்காம மோர் வரைக்கும் முடிச்சிட்டு படுத்துட்டான். தூங்கல.

சாந்தி கேக்குது...இன்னைக்கி உங்க பெரியப்பா பேசினதுக்கு நீங்க ஏன் மறுப்பு சொல்லல?
நான் எதுக்கு மறுப்பு சொல்லணும்?
எங்க அம்மா தான் அவ்வளவு தெளிவா சொல்றாங்கல்ல மூணாம் நாலு இல்ல மூணாம் மாசம் பண்ண சொல்லி...நீங்க அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?
பெரியவங்க பேசுறப்போ நான் பேசுனா நல்லாவா இருக்கும்.
ஏன் நல்லா இருக்காது...நமக்கு என்ன வேணுமோ அத நாம தான முடிவு பண்ணனும்?
சரி விடு அவுங்க இஷ்டப்படி செய்யட்டும். சொல்லிட்டு திரும்பி படுத்துட்டான்.
இப்படியே எல்லாம் முடிஞ்சிட்டா முதல் வரில சொன்னது நடக்காம போய்டும்ல...விதி அடுத்த ஆட்டத்த ஆரம்பிக்கிது சாந்தியோட குரல்ல!

அதென்ன... கல்யாணம் முடிஞ்சிட்டா... எல்லாம் மாப்ள வீட்டு பழக்கப்படி தான் நடக்கனுமா? கல்யாணத்தன்னைக்கே உங்க பெரியப்பா நெறைய பேசினாரு. வயசுல பெரியவராச்சென்னு எல்லாரும் அமைதியா இருந்தாங்க.
இனிமே அவரு ஏதாவது சொல்லட்டும் நானே நேருக்குநேர் பேசிக்கறேன்.

கேட்டதும் கோவம் வந்துடுச்சி மன்னனுக்கு.

அதுவரைக்கும் மன்னனோட நாக்குல இருந்த லட்சுமி தூக்கம் வருதுன்னு கெளம்பி போய்ட்டா. முழிச்சிகிட்டு இருந்த லட்சுமியோட அக்கா அவனுக்கே தெரியாம வந்து உக்கார்ந்துட்டா!

அவரு என்ன நெறைய பேசுனாரு. உங்க விண்ணமங்கலம் பாட்டி தான் நெறைய பேசுச்சி. உங்க குடும்பத்துல யாருக்குமே மரியாதைனா என்னன்னு தெரியாதுன்னு அப்பவே தெரிஞ்சிக்கிட்டேன்.
சோலிய முடிச்சிட்டா லட்சுமியோட அக்கா!

ஊசி வெடின்னு நெனச்சி தான் பத்த வச்சான் ஆனா பத்தவச்சது சரவெடின்னு அவனுக்கு தெரியாம போய்டுச்சி.

ஆரம்பிச்சுது சாந்தி... மன்னனோட குடும்பத்து வரலாற...கி பி 17ஆம் நூற்றாண்டுல இருந்து!
18 முடியிற வரைக்கும் முழிச்சிகிட்டு இருந்து மல்லு கட்டுனான். ஆனா முடியல. 19 ஆரம்பத்துலையே தூங்கியும் போனான்!
விடல சாந்தி. 21வரைக்கும்... கேக்குறானோ கேக்கலையோ...  சொல்லி முடிச்சிட்டு தான் தூங்குச்சி!

திருடனுங்க அன்னைக்கி வேலைய முடிச்சிட்டு கெளம்பிட்டாங்க...
உப்பு விக்கிறவரு வந்துட்டாரு...விடியப்போகுது!

வாச தெளிச்சி கோலம் போட சாந்தியோட அம்மா தெருவுக்கு போனா அங்க மன்னனோட பெரியப்பாவும் இன்னும் நாலு பொது ஆளுங்களும் நிக்கிறாங்க..!

ஒரு நாள் முழுக்க சேத்து வச்ச வன்மத்தோட கேக்குறாரு பெரியப்பா, உன்னோட மனசுல நீ என்ன நெனச்சிகிட்டு இருக்க? ஒரு பொது சபைல அப்படிதான் பேசுறதா?

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு