நதிமூலம்

வாப்பா சிவா, என்ன பாஸ்போர்ட் ஆபீஸ் பக்கம்?

அத ஏண்ணே கேக்குறீங்க, என்னோட மச்சான் சிவகொழுந்து துபாய்ல இருக்காம்ல
அவனோட கம்பெனில ஏதோ வேலை காலி இருக்காம் என்னை அங்க வர சொல்றான்.
அதான் பாஸ்போர்ட் எடுக்கலாம்னு வந்தேன்.

வேலை பத்தி விசாரிச்சியா? உன்னால செய்ய முடியிற வேலையாமா?

விசாரிச்சேன், ஏதோ கணக்கு எழுதுற வேலைதானாம். அதுனால ஒரு கால் போலியோ
அட்டாக் ஆனது பத்தி கவலை இல்லைன்னு சொல்லிட்டான்.

எப்போ கிளம்பனும்?

அடுத்த வாரமே வந்துரனும் அதனால தட்கல் ல பாஸ்போர்ட் எடுக்க சொன்னான்.

அவ்வளவு அவசரம்னா தட்கல் தான் நல்லது. ஒரு வாரத்துல கிடைச்சிடும்.

அட நீங்க வேறண்ணே அவன் சொல்லி ஒன்னரை மாசம் ஆச்சி. நான் அப்ளை பண்ணியே ஒரு மாசம் ஆக போகுது. இன்னும் கைக்கு கிடைக்கல வாராவாரம் வந்து பார்த்துட்டு போய்கிட்டு இருக்கேன்.

என்னது வாராவாரம் வறியா? பாஸ்போர்ட் ஆபிஸ்ல டீ கடை வச்சி இருக்க என் கண்ணுல படாம எப்படி போன? சரி அத விடு. எனக்கு தெரிஞ்ச ஆபீசர் ஒருத்தர் இருக்காரு. ரூபாய் ஆயிரத்த வெட்டுநீன்னா சாயங்காலம் பஸ்ல போறப்போ உன்னோட பாஸ்போர்ட்டும் உன்கூட வந்துடும். என்ன சொல்ற?

ஆயிரம் ரூபாயா? நான் எங்கண்ணே போவேன்? பஸ் டிக்கெட்டுக்கே காசு இல்லாம தான் வாரம் ஒரு முறை வந்து போய்கிட்டு இருக்கேன். இல்லன்னா தினமும் வந்துடுவேன். அது தவிர என்னோட வாழ்க்கைல யாருக்கும் எதுக்கும் லஞ்சம் குடுக்க கூடாதுன்னு நெனச்சிகிட்டு இருக்கேன்.

நீ வேலைக்கு ஆகமாட்ட. இந்த காலத்துல காசு இல்லாம நடக்குறது ஒரே வேலை தான்.
அது எந்த வேலைன்னு யாருக்கும் தெரியாது. காசு குடுக்கவும் மாட்ட வேலையும் ஆகணும்னா எப்படி?

இல்லண்ணே இன்னைக்கி எப்படியாவது அந்த ஆபீசர் கிட்ட கெஞ்சி கூத்தாடி பாஸ்போர்ட் வாங்கிடணும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

நீ முடிவு பண்ணா போதுமா? அவரு முடிவு பண்ண வேணாமா? சரி யாரு அந்த ஆபீசர்?
மூணாவது மாடில இருக்காரே, சண்முகம் அவருதான்.

அடப்பாவி அவரு தான் நான் சொன்னவரும். அவரு செம கறார் பார்ட்டி. காசு இல்லாம வேலை நடக்கவே நடக்காது.

அப்படி சொல்லாதீங்கண்ணே..இன்னைக்கி எப்படியும் வாங்கிடுவேன். நான் போய் அவுற பார்த்துட்டு வரேன்.
====================================
வணக்கம் சார்.

வாடா மறுபடி வந்துட்டியா?

ஆமாம் சார். என்னோட பாஸ்போர்ட்?

பெரிய பாஸ்போர்ட்...உன்னையெல்லாம் எவன்டா வெளிநாட்டுக்கு போக சொன்னது? எழுநூத்தம்பது ரூபா குடுத்துட்டு பாஸ்போர்ட் வாங்கிட்டு போண்ணு எப்பவோ சொல்லியாச்சி...அதுக்கு வக்கு இல்லை.

அதுக்கு வக்கு இல்லாததுனால தான் சார் வெளிநாட்டுக்கு போகவேண்டியதா இருக்கு.
அதெல்லாம் எனக்கு தெரியாது. காச வை. பாஸ்போர்ட் வரும். இல்லன்னா... உங்க ஊர்லையே நீ கால இழுத்துகிட்டு இழுத்துகிட்டு திரிய வேண்டியது தான்.

சார்...

வெளிய போய்டுன்னு சொல்லிட்டேன். என்னை கொலைகாரன் ஆக்கிடாத. யாருடா அவன் இந்த நேரத்துல கால் பண்றது. மொதல்ல இந்த செல்போன் ஐ ஒழிச்சிகட்டனும்.
சொல்லுமா என்ன?

ஏங்க ஹவுஸ் புரோக்கர் கால் பண்ணி இருந்தாருங்க. அந்த கோயம்பேடு பிளாட் பார்ட்டி இன்னும் ரெண்டு நாள் ல Foreignக்கு போய் செட்டில் ஆக போறாங்களாம். அதுனால நாளைக்குள்ள முடிக்கனுமாம். மீதி இருபத்தஞ்சி லட்சம் உடனே ரெடி பண்ணிடுங்க.

என்னமா சாதாரணமா சொல்ற? இருபத்தஞ்சி லட்சம் உடனே எப்படி புரட்டுறது?

அந்த Travel Agent கிட்ட கேட்டு பாருங்க. அடுத்த மாச payment ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லுங்க.

அவன் இப்போ europe டூர் போய் இருக்கான். அடுத்த வாரம் தான் திரும்பி வருவான்.கோயம்பேடு பிளட் ஐ கண்டிப்பா வாங்கியே தான் ஆகணுமா?

ஆமாங்க. பக்கத்துலையே பஸ் stand. ஊருக்கு போக வர சவுகரியமா இருக்கும்.

நீ மாசத்துக்கு எத்தனை முறை ஊருக்கு போய்வந்துக்கிட்டு இருக்க?

அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அந்த பிளாட் வேணும் வேணும் வேணும். நான் போன் ஐ வச்சிடறேன்.
==================================================
சார்....

மறுபடியும் வந்துட்டியா? உன்ன நான் வெளிய போக சொல்லி ரொம்ப நேரம் ஆச்சி. என் கண்ணு முன்னாடி நிக்காத போய்டு.
எனக்கு இப்போ இருபத்தஞ்சி லட்சம் வேணும். நீ குடுக்குற பிச்சை காசுக்கு நான் தொண்டை கிழிய கத்தனுமா?
மனுஷன் இருக்குற இருப்பு தெரியாம என்கிட்டே விளையாடாத. போய்டு.

சரி சார். நீங்க கோவப்படாதீங்க நான் கிளம்புறேன்.
===================================================

வாப்பா சிவா வந்து ரொம்ப நேரம் ஆச்சா எந்த பஸ்சுக்கு வந்த ?

அஞ்சி மணி வண்டிக்கு வந்தேன். எங்கம்மா போய்ட்ட வீட்ட பூட்டிகிட்டு?

நம்ம துர்க்கை அம்மன் கோயிலுக்கு போய் இருந்தேன். .பாஸ்போர்ட் கிடைச்சிடுச்சா?

இல்லம்மா.

ஒன்னும் கவலை படாத ராசா இப்போ தான் கோயில்ல அந்த பாஸ்போர்ட் அபீசரோட மனசு மாறணும்னு... காசு முடிஞ்சி வச்சிட்டு வந்தேன்.

அது மட்டும் போதாதும்மா அடுத்த முறை கோயிலுக்கு போனா அந்த அபீசரோட வீட்டுக்காரம்மாவுக்கும் மனசு மாறணும்னு முடிஞ்சிவைமா.

சரி சரி வந்த புள்ளைய உட்காரவச்சி பேசிகிட்டு இருக்கேன் பாரு. கை கால் கழிவிகிட்டு வாப்பா சாப்பிடலாம்.
=====================================================

சிவா சிவா...

யாரு மணியா, வாடா.

என்னடா பாஸ்போர்ட் வாங்க போனியே என்ன ஆச்சி?

அட போடா நீ வேற. இந்த முறையும் அந்த ஆளு என்னை திட்டு அனுப்பிட்டாருடா. அந்த
ஆள் என்னை என்னவெல்லாம் சொல்லி அசிங்க படுத்துனாறு தெரியுமா?
எனக்கு அழுகையே வந்துடுச்சி. ஏன்டா லஞ்சம் குடுக்க மாட்டேன்னு சொல்றது தப்பா?

தப்பில்லைடா. ஆனா இப்போ எல்லாம் லஞ்சம் வாங்குறதோ குடுக்குறதோ கேவலம்னு நெனைக்கிறவங்க ரொம்ப கம்மி. அதுனால தான் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் ரொம்ப ஆட்டம் போடுறாங்க.

இருக்குறவன் குடுக்குறான். என்னை மாதிரி இல்லாதவன் என்னடா பண்ணுவான்.

ஒன்னு பண்ணலாம். அவன் பண்றது தப்புன்னு அவனுக்கு புரிய வைக்கலாம். ஒரு வேலை நீ விரும்புநீன்னா...

கண்டிப்பா புரிய வைக்கணும்டா ஆனா எப்படி?

அதுக்கு லஞ்ச ஒழிப்பு துறைன்னு ஒன்னு இருக்கு. அதுக்கு போன் ஐ போடுவோம். மத்தத அவுங்க போடுவாங்க.

சரி வா.
=======================================================

வாங்க, நீங்க தான் போன்ல பேசின சிவாவா?

ஆமாம் சார். இது என்னோட நண்பன், மணி.

வணக்கம் சார். நான் தான் சார் உங்கள பத்தி இவனுக்கு சொன்னேன். அந்த பாஸ்போர்ட் அபீசர்க்கு....

அத நாங்க பார்த்துக்கறோம்...சிவாவை வச்சி தான் பிளான் பண்ணனும்.
சிவா, நீங்க அடுத்த முறை சண்முகத்தை பாக்க போகும் போது நாங்க குடுக்குற ரூபாவ குடுங்க.
அதுல ரசாயம் தடவி இருக்கும். அந்த பணத்தை சண்முகம் வாங்குன உடனே எங்களுக்கு சிக்னல் குடுங்க. நாங்க அவுற on the spot அர்ரெஸ்ட் பண்ணிடுவோம்.

சரி சார். ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்.

அது பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க. இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இப்போ எல்லாம் நிறைய பத்திரிக்கைல கூட வருதே. so dont worry.
========================================================

சார், வணக்கம்.

ஏன்டா சனியனே காலைலேயே வந்துட்டியா...வேலை ஆரம்பிக்கிரப்போவே நொண்டி கால பார்த்தா...இன்னைக்கி நாள் வெளங்குன மாதிரி தான்.
போ போய் அப்படி ஓரமா நில்லு.

சார் நீங்க கேட்ட ரூபா எடுத்துகிட்டு வந்து இருக்கேன். அத குடுக்கலாம்னு தான் சார் வந்தேன்.

ஒரு வழியா புத்தி வந்துடுச்சா...அதாண்டா உங்கள எல்லாம் பத்து முறை அலைய விட்டா தான் வழிக்கு வருவீங்க. சரி பணத்தை எடு.

இந்தாங்க சார். சரியா இருக்கானு பார்த்துக்கோங்க.

சரி சரி. இன்னும் ஒரு மணி நேரத்துல பாஸ்போர்ட் குடுத்துட சொல்றேன். அங்க போய் உக்காரு. எவ்வளவு நேரம் ஒரே கால்ல நிப்ப பாவம்.
==========================================================

மிஸ்டர் சண்முகம் உங்கள அர்ரெஸ்ட் பண்றோம். ப்ளீஸ் cooperate with us.

என்ன அர்ரெஸ்ட் பண்றீங்களா? ஹலோ நீங்க யாரு? உங்கள யாரு உள்ள விட்டது...யோவ் மாணிக்கம் எங்கயா இருக்க?

நாங்க லஞ்ச ஒழிப்பு துறைல இருந்து வரோம். நீங்க இப்போ லஞ்சம் வாங்குனத கேமரால ரெக்கார்ட் பண்ணி இருக்கோம்.
அப்புறம் உங்க மேல ஒருத்தர் கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காரு.

என் மேலயா? யாரு?

அது உங்களுக்கு தேவை இல்லாதது. நடங்க போகலாம்.
===========================================================

ஏன்டா சிவா, சண்முகத்தை அர்ரெஸ்ட் பண்ணதுல இருந்து ஏன்டா ஒரு மாதிரி இருக்க?

இல்லடா மணி, பேப்பர் ல எல்லாம் இத பத்தி தான் பெருசா போடுறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.

நீ எதுக்குடா பயப்படனும்? உன்ன மாதிரி எத்தனையோ பேருக்கு நல்லது பண்ணேன்னு நெனச்சி சந்தோஷமா இருடா.

என்னோட பாஸ்போர்ட் அவ்வளவுதானா?

இல்லடா இப்போ சண்முகத்துக்கு பதிலா ஒரு புது ஆபிசர் வந்துட்டாரு. அவுற போய் பாரு.
============================================================

வாப்பா சிவா. மறுபடி பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு வந்துட்டியா? போன வாரம் முழுக்க உன்னை
பத்தியும் சண்முகம் சார் பத்தியும் தான் பேச்சி என்னோட டீ கடைல.
தெரியாம தான் கேக்கறேன்...உனக்கு ஏதாவது அறிவு இருக்கா? இப்படி கூடவா எவனாவது பண்ணுவான்?

இல்லண்ணே வேணும்னே எதுவும் பன்னல . பாஸ்போர்ட் கிடைக்குலைங்குற வருத்தத்துல தான் அப்படி...

நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? இப்போ உள்ள போனவரு அடுத்த வாரம் வெளில வந்துடுவாரு. ஆனா உன்னோட பாஸ்போர்ட் ...அதோ கதி தான்.
ஊருக்கு போய் உழவு பாரு..உன் கதை முடிஞ்சி போய்டுச்சி.

என்னண்ணே சொல்றீங்க? புது ஆபீசர் வந்து இருக்காரு. பாஸ்போர்ட் வாங்கலாம்னு வந்தா...

புதுசா வந்த ஆபிசர் சிவா எப்போ வருவாரு... பாஸ்போர்ட் குடுக்கணும் தவம் கெடப்பாரா? எவண்டா அவன் நம்ம ஆள போட்டு குடுத்ததுன்னு கத்திய தீட்டி வச்சிக்கிட்டு இருப்பாரு...போய் பாரு...
=============================================================

சார்...

யாரு? வாங்க உள்ள.

சார், என் பேரு சிவா. என்னோட பாஸ்போர்ட் விஷயமா...

சிவான்னு சொன்ன எப்படிப்பா புரியும்.. பைல் நம்பர் வச்சி இருக்கியா?

இருக்கு சார், AL238742

அடடே நம்ம சிவா. சண்முகத்தை அர்ரெஸ்ட் பண்ண வச்ச சிவா இல்லை நீங்க?

ஆமா சார். ஆனா எனக்கு பாஸ்போர்ட் இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க சார். உங்கள தான் சார் நான் கடவுள் மாதிரி நம்பிகிட்டு இருக்கேன்.

என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற...உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். இப்போ பேச முடியாது. லஞ்ச் பிரேக் ல பேசுவோம். இன்னும் இரண்டு மணி நேரம்
கழிச்சி இங்க வரமுடியுமாப்பா?

கண்டிப்பா வரேன் சார்.
================================================================
அண்ணே, புதுசா வந்த ஆபிசர் என்கிட்டே ஏதோ பேசணுமாம். ரெண்டு மணி நேரம் அப்புறம் வர சொல்லிட்டாரு.

நான் சொன்னேன்ல...இப்படியே ஓடி போய்டு. பாஸ்போர்ட் இல்லன்னா என்ன...ஊருக்கு போய் ஆடு மாடு மெய்ச்சி காலத்தை ஒட்டு.

இல்லன்னே...ஆனது ஆச்சி இருந்து பார்த்துட்டே போய்டறேன்.
================================================================

வாப்பா சிவா, சரியா நேரத்துக்கு வந்துட்டியே.

சார் நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்னை பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க சார்.
அந்த பாஸ்போர்ட்ல தான் சார் என்னோட வாழ்கையே இருக்கு. தயவு செஞ்சி சண்முகம் சார் ஐ நான் மாட்டி விட்டத மறந்துடுங்க சார்.

என்னப்பா சொல்ற...மன்னிக்கிற மாதிரி நீ எந்த தப்பும் பண்ணலையேப்பா . நீ என்னையும் அவரு மாதிரியே நெனசிட்டன்னு நெனைக்கிறேன்.
இப்படி வந்து உக்காரு. நீ சாப்டியா?

இல்லை சார். உங்ககிட்ட பேசிட்டு அப்புறம் சாப்பிடலாம்னு இருக்கேன்.

சரி வா ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.

இல்லை சார். நீங்க சாப்பிடுங்க. நானும் சாப்பிட்டா உங்களுக்கு பத்தாம போய்டும் சார்.

ஒருத்தர் சாப்பாட்ட ரெண்டு பேர் சாப்பிடலாம்பா. ரெண்டு பேர் சாப்பாட்ட தான் ஒருத்தரால சாப்பிட முடியாது. என்னோடது வீட்டு சாப்பாடு தான். நான் ஒருத்தனே இவ்வளவும் சாப்பிட முடியாது வா கைய கழுவு.
==================================================================

சாப்பாடு நல்லா இருந்ததாப்பா?

நல்லா இருந்தது சார்.

என்னோட மனைவி சமையல் நல்ல இருக்குனு சொன்ன ஒரே ஆள் நீ தான். அது இருக்கட்டும்...என்னப்பா நடந்தது சண்முகம் இருந்தப்போ?

நீங்க மன்னிச்சிட்டேன்னு சொன்னா தான் சார் நான் சொல்லுவேன்.

நீ எந்த தப்பும் பண்ணலைன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நீ நடந்தத தைரியமா சொல்லு.

நான் எல்லாரையும் போல தட்கல்ல பாஸ்போர்ட் அப்ளை பண்ணினேன். ஒரு வாரம் ஆச்சி. பாத்து நாள் ஆச்சி. பாஸ்போர்ட் வரவேயில்லை. சரி நேர்ல வந்து விசாரிக்கலாம்னு இங்க வந்தேன். சண்முகம் சார் ஐ பாக்க சொன்னாங்க. பார்த்தேன். அவரு, உன்னோட பாஸ்போர்ட் ரெடியா இருக்கு. எழுநூத்தம்பது ரூபா குடுத்துட்டு வாங்கிட்டு போன்னு சொன்னாரு. அதுக்கு நான், சார் தட்கல்க்கு கட்டுறதுக்கே என்னோட மச்சான் தான் காசு அனுப்புனான். என்கிட்டே அவ்வளவு பணம் இல்லைன்னு சொன்னேன்.
அதுக்கு அவரு, என்னை பத்தி, என்னோட காலை பத்தி ரொம்ப கேவலமா பேசினாரு. என்னோட கால் இப்படி இருக்கிறது என்னோட தப்பா சார்?
எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சி...அப்போ தான் என்னோட சிநேகிதன் ஒருத்தன் மூலமா லஞ்ச ஒழிப்பு துறைக்கு போனேன். அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.

லஞ்சம் வாங்குறதும், தெருவுல பிச்சை எடுக்குறதும் ஒண்ணுன்னு இவங்களுக்கு என் புரியமாட்டேங்குதுன்னு எனக்கும் தெரியலப்பா.

சார் நீங்க பேசுறத பார்த்தா நீங்க சண்முகம் சார் மாதிரி இல்லைன்னு தோணுது. நான் பயந்துகிட்டே இருந்தேன் சார். இப்போ தான் நிம்மதி ஆச்சி.
ஆனா சண்முகம் சார் எதுக்கு அந்த மாதிரி எல்லார்கிட்டயும் நடந்துக்குறாருன்னு புரியவே இல்லை சார்.

பேராசை தான் காரணம்.

என்ன சார் சொல்றீங்க.

ஆமாம், வரவுக்கு தகுந்த வாழ்க்கை வாழறதுக்கு இன்னைக்கி எல்லாருக்குமே கசக்குது. அது தான் அடிப்படை காரணம்.

சரியா சொன்னீங்க சார். அன்னைக்கி நான் பாஸ்போர்ட் கேக்க வந்தப்போ. சண்முகம் சார் வீட்டுக்காரம்மா கால் பண்ணி இருபத்தஞ்சி லட்சம் ரெடி பண்ண சொன்னாங்க.
கோயம்பேடு ல ஒரு கோடி ரூபா பிளாட் வாங்குறதுக்கு.

பார்த்தியா. நான் சொல்லல. சன்முகத்தோட சம்பளமே மாசம் முப்பதாயிரத தாண்டாது. ஆனா ஒரு கோடி ரூபா பிளட்க்கு ஆசைபட்டா எப்படி?

அப்போ அவரோட வீடுக்காரம்மாவால தான் அவரு இப்படி ஆயிட்டாருன்னு சொல்றீங்களா சார்?

வீட்டுக்காரம்மா சொன்னா இவருக்கு எங்க போச்சி அறிவு? இவரோட மனசுலயும் சலனம் இருக்குறதுனால தான அவுங்க இவுர விரட்டுறாங்க? இதை சரி பண்ண ஒரே வழி, வரவுக்குள்ள செலவு இருக்குற மாதிரி தேவைய சுருக்கிக்கணும். தேவையை சுருக்க முடியலையா, தேவைக்கு ஏத்த மாதிரி வரவு குடுக்குற வேற வேலைய பாக்க போய்டணும்.
ஆனா இருக்குற வேலைலயே தேவைக்கு ஏத்த மாதிரி சம்பாதிச்சி காட்டுறேன்னு குலதெய்வத்துக்கு முன்னாடி சத்தியம் செஞ்ச ஆளுங்க தான் சண்முகம் மாதிரி ஆயிடுறாங்க.
மாசம் மூனாயிரம் போதும்னா ஹோட்டல்ல டேபிள் தொடச்சி கூட காலத்த ஓட்டலாம். ஆனா முப்பதாயிரம் தேவைன்னா அதுக்கு எத்த மாதிரி அறிவ வளத்துகிட்டு, டாக்டர், வக்கீல், Engineer ன்னு ஆயிடனும். என்னப்பா பாக்குற, இத எல்லாம் எதுக்கு இந்த ஆள் லூஸ் மாதிரி என்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காருன்னா?

அப்படி எல்லாம் இல்லை சார்.

நீ அத தான் நினைப்ப எனக்கு தெரியும். மனசுல பட்டதை உன்கிட்ட தான் சொல்ல முடியும்னு தோனுச்சி அதான் சொன்னேன். இப்போ நான் உன்கிட்ட சொன்னனே, இதையே மூணு மாசம் முன்னாடி ஒரு பார்ட்டி ல சன்முகதுகிட்ட சொன்னேன். அப்போ அவரு என்னைப்பார்த்து, யோவ் நீ தான் பொழைக்க தெரியாதவன். என்னையும் கெடுக்க பாக்குறியா? உன்னோட மூஞ்ச பார்த்துட்டு குடிச்சா போதை கூட சரியா ஏறாது.. ஒழுங்க எழுந்து பொய் அந்த டேபிள்ல உக்கார்ந்துடுன்னு சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்னு நெனச்சிகிட்டு வந்துட்டேன்.
சரிப்பா நேரம் ஆயிடுச்சி. நான் சீட்டுக்கு போகணும். உன்னோட பாஸ்போர்ட் இன்னும் அரை மணி நேரத்துல வந்துடும். வாங்கிட்டு போய்டு.

சரி சார்.
================================================================

வாப்பா சிவா, தப்பா எடுத்துக்காத. அரை மணிநேரம்ன்னு சொல்லிட்டு ஒரு மணிநேரம் ஆக்கிட்டேன். உன்னோட பைல்ல நீ செத்துபோயட்டன்னு சண்முகம் நோட் போட்டுட்டாரு. அத மாத்துறதுக்கு தான் கொஞ்சம் நேரம் ஆயிடுச்சி.
இந்தாப்பா உன்னோட பாஸ்போர்ட். நல்லபடியா துபாய்க்கு போயிட்டு வாப்பா.

சார்..

அட ஏம்ப்பா அழற?

இல்ல சார், இந்த பாஸ்போர்ட் ஐ நான் பார்ப்பனான்னு நெனச்சி பல நாள் அழுது இருக்கேன் சார். இன்னைக்கி இத கண் முன்னாடி பார்த்ததுல..என்னால...என்னால....

சரி சரி...பாஸ்போர்ட் வாங்குறது பெரிய விஷயம் இல்லை. நான் சொன்னத, நான் சொன்னதுன்னா அத நான் சொல்லல, பெரியவங்க சொன்னத மனசுல வச்சி பேராசை இல்லாத வாழ்க்கை நடத்தனும் அது தான் முக்கியம்.

சார்...எனக்கு இப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..உங்களுக்கு நான் ஏதாவது பண்ணியே ஆகணும் சார்.

ஐயோ எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல சார். ஆங் ஞாபகம் வந்துடுச்சி... பஸ்ல சாப்பிடுறதுக்கு எங்க தோட்டத்துல பழுத்த பலா பழம் குடுத்து விட்டாங்க சார் எங்க அம்மா. இந்தாங்க சார். இத, இந்த ஏழையோட சின்ன அன்பளிப்பா வாங்கிக்கோங்க சார்.

அதெல்லாம் எதுவும் வேணாம் சிவா. நீ நல்லபடியா இருந்தா அதுவே போதும்.

இல்லை சார். நீங்க மறுக்க கூடாது. தயவுசெஞ்சி இத வாங்கிக்கோங்க. நீங்க எனக்கு கடவுள் மாதிரி.

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதப்பா.. இப்போ என்ன அத நான் வாங்கிக்கணும். அவ்வளவு தான. குடு. பத்திரமா ஊருக்கு போயிட்டு வாப்பா.
====================================================================

வாப்பா சிவா, போன காரியம் என்ன ஆச்சி?

அம்மா, உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம். பாஸ்போர்ட் கிடைச்சிடுச்சி.

என்னப்பா சொல்ற...எல்லாம் அந்த துர்க்கை அம்மன் அருள்தாம்பா.

ஆமாம்மா இப்போ வந்து இருக்க ஆபீசர் ரொம்ப தங்கமானவரு. வரப்போவே நான் துர்க்கை அம்மன் கோயிலுக்கு போய் அவரோட மனசு என்னைக்கும் மாறாம இப்போ மாதிரியே இருக்கணும்னு வேண்டிகிட்டு காசு முடிஞ்சிவச்சிட்டு வந்தேன்.

நல்லதுப்பா. அந்த பாஸ்போர்ட் ஐ அப்பா படத்துக்கு முன்னாடி வச்சி சாமி கும்பிட்டுக்கப்பா..

=====================================================================

மாணிக்கம், கொஞ்சம் இங்க வாங்க.

வந்துட்டேன் சார்.

மாணிக்கம், ஆடிட்டிங் பைல்ல அந்த பையன், சிவாவோட details அப்டேட் பண்ணிடுங்க.

சரிங்க சார். அந்த பையன் ரொம்ப சந்தோஷப்பட்டான் சார். சண்முகம் சார் அவன ரொம்ப கஷ்டப்படுத்திட்டாறு. ஏதோ நீங்க வந்து அவனுக்கு நல்லது பண்ணீங்க. உங்களுக்கு கோடி புண்ணியம் சார்.

நீங்க என்ன மாணிக்கம் அவனுக்கு சமமா என்னை புகழுறீங்க. நான் என்னோட வேலைய செஞ்சேன் அவ்வளவுதான். சரி நான் கிளம்புறேன்.
======================================================================

புது ஆபிசர் சைக்கிளில் அன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி வீடு நோக்கி புறப்பட்டார்.
ஆரம்ப நாட்களில் சண்முகம் கூட மிக நேர்மையான அதிகாரியாகத்தான் எல்லோராலும் அறியப்பட்டு இருந்தார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் பொதுமக்கள் விருப்பப்பட்டு தரும் சிறு சிறு அன்பளிப்புகளை பெற ஆரம்பித்தவர், பின்னாட்களில் விருப்பப்பட்டு தருபவர்களிடம்
பொருளாக அல்லாமல் பணமாக பெற ஆரம்பித்தார். கடைசீயில் பணம் தந்தே ஆக வேண்டும் என கெடுபிடி செய்ய ஆரம்பித்து இப்போது கைதாகி
கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஆரம்பம் பொதுமக்கள் விரும்பி தரும் அன்பளிப்பு.. அப்படியானால் இது தான் நல்லோர்களை கயவர்களாக மாற்றுகிறதா? தெரியவில்லை...அன்பளிப்பு..
இந்த "அன்பளிப்பு" எனும் வார்த்தை புது அபீசரின் மனதில் எதையோ நினைவு படுத்தியது....
அது...அந்த...பலாபழம்.
இந்த பலாபழம் நம்மையும் மாற்றிவிடுமோ...என பயந்தவர், அதை சாலையோரத்தில் இருந்த மூதாட்டிக்கு தானம் செய்துவிட்டு நிம்மதியாக
மிதிவண்டியை மிதிக்கலானார்.
துர்க்கை அம்மன் கோயிலில் சிவா முடிந்து வைத்த காசு இவரை இங்கே ஏதோ செய்தது மட்டும் நிஜம்.

முற்றும்.
http://ashokmrin.blogspot.com