சாந்தி வீட்டுக்கார் 5!

சாந்தி வீட்டுக்கார்! - 5
====================

அடியே சாந்தி, முழுகாம இருக்கவ... மனசுக்கு புடிச்சத தான் செய்யணும், சாப்புடனும்,கேக்கணும். அப்போ தான் பொறக்குற புள்ள ஆரோக்யமா பொறக்கும் - சொல்றது யாருன்னா மூணாவது வீட்டு பேபி அக்கா.
பேபி அக்காக்கு 89 வயசு. அப்போ அடுத்த பொங்கலுக்கு தாங்க மாட்டாங்கன்னு நெனைக்க கூடாது. "அக்கா"  ன்னு கூப்புடுற அளவுக்கு திடகாத்திரமா இருக்காங்க.

உனக்கு என்ன புடிக்கும்னு யாராவது கேட்டா, சமையல் புடிக்கும்னு தான் சொல்லும் சாந்தி.
ஏன்னா அத தான் இதுவரைக்கும் சாந்தி செஞ்சதே இல்லை!

எப்படி... பாட்டு புடிக்கும்னு சொல்றவங்களுக்கு பாடத்தெரிஞ்சி இருக்கணும்னு அவசியம் இல்லையோ அதே மாதிரி சமையல் புடிக்கும்ன்னு சொல்றவங்ககிட்டையும் ஜாக்கிரதையா இருக்கணும்!.

சாந்தி சமையல் ஆரம்பிக்க போகுது. முட்டை குருமா!
பாட்டி உசுரோட இருந்தப்போ சொல்லி குடுத்தது. காதால கேட்டு கண்ணால பார்த்ததோட சரி.
குருமாவுக்கு தேவையான பொருள் எல்லாம் இருக்கு.
பெரிய வெங்காயம் மூணு. சின்ன தக்காளி ஒன்னு. ஆட்காட்டி வெரலும் நடு வெரலும் சேர்த்து வச்சி அதுல பாதி நீளம் அளவு இஞ்சி. பூண்டு நாலு பல்லு.  பச்சை மொளகா ரெண்டு.
தாளிப்புக்கு கடுகு, பெருஞ்சீரகம், பட்டை சின்னது, கிராம்பு மூணு. ஏலக்காய் ஒன்னு.

வெங்காயத்தை ரெண்டா நறுக்கி, ஒரு பாதிய எடுத்து அத பக்கவாட்டுல இருந்து சேமியா மாதிரி ரெண்டு பங்கு தெடத்துல  நறுக்கி, முடிஞ்சதும், எதிர்பக்கத்துல திருப்பி, கூடுமான வரைக்கும் மை மாதிரி நறுக்கி முடிக்குது சாந்தி.
வெங்காயத்தை எவ்வளவுக்கெவ்வளவு பொடியா நறுக்குரமோ அவ்வளவுக்கவ்வளவு குழம்பு கெட்டியா வரும். பாட்டியோட அசரீரி கேக்குது... வேலை எல்லாம் முடிஞ்ச அப்புறம்! 

அடுத்து இஞ்சி, பூண்டு.
நறுக்கி போட்டா மனம் சேராது. இடிச்சி போடு இல்லன்னா நசுக்கிபோடு... மனம் கூடும்னு சொன்னது ஞாபகம் வந்துடுச்சி. அப்படியே செய்யிது சாந்தி.

தக்காளி - அத நாலா நறுக்கியாச்சி. முடிஞ்சிது வேலை. இனி அடுப்புல வைக்கவேண்டியது தான் சட்டிய!
வச்சாச்சி!
அடுத்து என்னைய ஊத்தணும்.
எவ்வளவு ஊத்துறதுன்னு தெரியல. பாட்டியயும் காணோம் - மேலுலகத்துல இப்போ தூங்குற நேரம் போல இருக்கு!
குத்துமதிப்பா மூணு கரண்டி எண்ணெய் ஊத்திடுச்சி. இன்னும் அரை கரண்டி ஊத்தி இருந்தா அப்பலமே பொரிக்கலாம்!

எண்ணெய் காஞ்சதும் தாளிக்கிற பொருள் அத்தனையும் போட்டாச்சி.
வெங்காயமும் போட்டு வதக்குது சாந்தி. ஊத்துன எண்ணைல வதங்குறதுக்கு பதிலா பொறியிது வெங்காயம்.
வித்யாசம் தெரியல சாந்திக்கு. அடுத்து இஞ்சி பூண்டு விழுத சேர்க்குது.
கொஞ்ச நேரத்துல கெளம்புன வாசம் சாந்திக்கு ஒத்துக்கல. மாசம் அந்த மாதிரி.
தளராம வதக்குது. கறிக்குழம்பு மனம் வந்துடுச்சி. பச்சை மொளகாவ போட்டாச்சி. தக்காளியையும் சேர்த்தாச்சி.

எண்ணெய் மேல வர்றவரைக்கும் தக்காளிய வதக்கணும் அப்போதான் குழம்புல பச்சை தக்காளி வாசம் அடிக்காதுன்னு பாட்டி சொன்னது ஞாபகத்துல இருக்கு.
அது, எண்ணைய அளவா ஊத்துனா சரி. இங்க தான் ஏற்கனவே எண்ணெய் குளம்கட்டிகிட்டு இருக்கே!   
சாந்திக்கு என்ன பண்றதுன்னு தெரியல. கொஞ்ச நேரம் அழலாமான்னு யோசிக்குது! சரின்னு முடிவு பண்ணி அழ ஆரம்பிக்கவும், தூங்க போன பாட்டி திரும்பி வரவும் சரியா இருந்தது.

பார்த்ததும் வெளங்கிடுச்சி விவரம் பாட்டிக்கி .

ஒன்னும் கவலைபடாத ஆத்தா போட்ட தக்காளிய வதக்கிகிட்டே இரு. தக்காளி வாசம் போய், தக்காளி போடுறதுக்கு முன்னாடி ஒரு கறிக்குழம்பு வாசம் வந்துச்சி பாரு, அது திரும்ப வரும். அது வந்ததும் நல்ல பதத்துக்கு வந்துச்சின்னு அர்த்தம்!

பாட்டி சொன்னதும்தான் சாந்திக்கு உதட்டுல சிரிப்பு வந்துது! சிரிச்சி முடிக்கிறப்போ வாசம் வந்துடுச்சி!
அடுத்து உப்பு, மஞ்சள் பொடி, மொளகாத்தூள், மல்லித்தூள் எல்லாத்தையும் அளவா போட்டு நெடி போறவரைக்கும் மூணு பெரட்டு பெரட்டி, ரெண்டு கொவளை தண்ணிய ஊத்திடுச்சி.

கொதிவந்ததும், பச்சை முட்டைய ஒடச்சி அப்படியே கொதிக்கிற குழம்புல ஊத்திடுச்சி. இப்போ தான் மொதமுறையா உப்பு காரம் பாக்கனும்னு தோணுது சாந்திக்கு. கரண்டில கொஞ்சமா எடுத்து, ரெண்டு சொட்டு உள்ளங்கைல விட்டு நாக்கால சுவச்சி பாக்குது. ஒரு ருசியும் தெரியல. மானசீகமா பாட்டிகிட்ட கேக்குது நீ சாப்ட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்றியா?
எனக்கு வேணாம்டி ஆத்தா. பயந்துக்கிட்டு ஓடிருச்சி பாட்டி. உசுரு போனாலும் உசுரு மேல இருக்க பயம் இன்னும் போகல!

இப்போ வேற யாரும் இல்லை கொழம்பு எப்படி இருக்குன்னு சொல்ல.
எப்பவும் போல பசியோட வரான் மன்னன்! ஒரு மாலை போட்டு மஞ்ச தண்ணி மட்டும் தெளிச்சா...அவன் அதே தான்! ஆனா விவரம் புரியாம தாவிகுதிச்சிகிட்டு வாரான்.

ஆவி பறக்க வெள்ளை சோறு. கொதிக்க கொதிக்க முட்டை குருமா!

இன்னைக்கி நானே சமைச்சேன். முட்டை குருமா. சாந்தி ஆர்வமா சொல்லுது.

இவன் கேட்டானா இல்லையான்னு தெரியல. தட்டு மேலேயே குறியா இருக்கான்!
வச்சதும் பாயறான் சோறு மேல! அவசர அவசரமா பெசஞ்சி மொதவாய் சாப்டுட்டு கேக்கறான்.
இதுக்கு என்ன பேருன்னு சொன்ன?

முட்டை குருமா!

அது இப்புடியா இருக்கும்? - இவனுக்கு நாக்குல சனி எல்லா கிழமைலயும் இருக்கும்.

சாந்தி ஆரம்பிக்கிது.
முன்ன பின்ன முட்டைய சாப்ட்டு இருந்தா தான தெரியும்.
முட்டைன்னா அது பாம்பு குடிக்கிறதுன்னு சொல்ற குடும்பத்துல இருந்து வந்தா எப்படி தெரியும்?

குருமாவ பத்தி கேட்டா முட்டைய பத்தி பேசுதேன்னு இவனுக்கு தோணுது. ஆனாலும் பதில் சொல்றான்.
நல்லா இருக்கு குழம்பு.!!
அன்னைக்கி பொழுதுக்கு அவன் உசுர காப்பாத்திட்டாரு கடவுள்!

சாப்ட்டு முடிச்சிட்டு ரெண்டு பேரும் திண்ணைல உக்கார்ந்த நேரத்துக்கு சாந்திக்கு உடம்பு என்னவோ பண்ண ஆரம்பிக்கிது.
வலியால துடிக்கிது. பக்கத்து வீட்டுக்காரங்க கஷாயம் குடுக்குறாங்க. தெரிஞ்ச கைவைத்தியம் எல்லாம் செய்யிறாங்க. வலி அடங்குற மாதிரி தெரியல. பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க.

அங்க சோதனை செஞ்சி பார்த்த மருத்துவச்சி சொல்லுது....
கரு, கருப்பைக்கு வெளில உருவாகி இருக்கு. இத இப்பொவே கலச்சிடுறதுதான் நல்லது. யோசிச்சி சீக்கிரம் முடிவு சொல்லுங்க!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக். மு

No comments:

Post a Comment