சாந்தி வீட்டுக்கார்!

சாந்தி வீட்டுக்கார்
===================

யாரு இதுனு பாக்குறீங்களா... நம்ம எல்லாருடைய வாழ்க்கைலயும் attendance போடுவாரு.
ஆளு எப்படி இருப்பாப்புலன்னா, எப்பவும் எதிர் காத்துல சைக்கிள் மிதிச்சிகிட்டு வந்த மாதிரி தலைமுடி,
போட்டு இருக்க சட்டைய பார்த்தா அவரோடதுதானான்னு ஒரு சந்தேகம்,

ஒரு கொத்து துண்டு சீட்டு, மேல் பாக்கெட்ல; அதே அளவு உள்பாக்கெட்ல!
சொந்தக்காரன், தெரிஞ்சவன், பஸ்ல பக்கத்துல உக்கார்ந்தவன் எல்லாருவீட்டு நல்லது கெட்டதுலயும் மொத ஆளா போய் எல்லா வேலையையும் இழுத்துபோட்டு செஞ்சிட்டு கடைசீ ஆளா வீடுவந்து சேர்ரது,
ஊர்ல யாருக்கு வரன் பார்த்தாலும் சொந்த செலவுல ஊரு விட்டு ஊரு போய் ஜாதகம் handover பண்றது...
இதெல்லாம் இவரோட பிறவி குணங்கள்.!!

அதுக்கு இப்போ என்னன்னு கேக்குறீங்களா?
 "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
 எல்லார்க்கும் பெய்யும் மழை" னு திருவள்ளுவர் சொன்னாரே அது யாரா இருக்கும்னு யோசிச்சேன்...கண்டிப்பா அது இவராதான் இருக்கணும்.
இவர கொஞ்சம் கிட்ட இருந்து பாக்கலாம்னு உங்களையும் கூட்டிகிட்டு போக வந்தேன்!

சாந்தி வீட்டுக்கார்!

சாந்திய கல்யாணம் பண்ணதும் தான் இந்த பேரு. அதுக்கு முன்னால வரைக்கும் மன்னன் - அதான் அவன் பேரு.
நல்லவங்கள்ள ரெண்டு விதம் உண்டு. தான்கிட்ட இருக்குற கெட்டத தெறமையா மறைச்சிகிட்டு நல்லதமட்டும் வெளில காட்டுரவங்க ஒரு விதம். 
தான் கிட்ட இருக்குறதுல இன்னதுதான் கெட்டதுன்னு தெரியாம வெள்ளந்தியா பழகுறவங்க இன்னொரு விதம்.  இதுல மன்னன் ரெண்டாவது ரகம். 

சாந்தி - அந்த தெருவுல சொந்தமா இட்லி கடை வச்சி இருக்கு. அந்த தெரு, பக்கத்து தெரு - ரெண்டு தெருவுல யாருக்கு காயலா போனாலும் சரி, யாருக்கு கொழந்தை பொறந்தாலும் சரி சாந்தி கடை இட்லி தான் ஆகாரம்.
தான் கடை இட்லி, காய்ச்சலுக்கு மருந்து கொழந்தைங்களுக்கு விருந்துன்னு சிலேடையா பெருமைப்பட்டுக்கும் சாந்தி!
சாந்தி சுடுற இட்லி தும்பை பூவ விட மிருதுவா இருக்கும். வாய்ல வச்சா வெண்ணை மாதிரி வழுக்கிகிட்டு போய்டும்!
இதுக்கெல்லாம் காரணம் சாந்தியோட பாட்டி! மேல போறதுக்கு முன்னால இட்லி சுடுற சூட்சமத்த சொல்லி குடுத்துட்டு போய்டுச்சி அந்த மகராசி!
அடியே சாந்தி...இட்லிய பொறுத்தவரைக்கும் நல்ல அரிசி நாலு அளவு, நல்ல உளுந்து ஒரு அளவு மட்டும் இருந்தா போதாது...இட்லி வார்க்குறதுலதான் விஷயம் இருக்குது.
மாவ அரச்ச உடனே உப்பு போட்டு நல்லா கரச்சி வச்சிடணும். மறுநாள் புளிச்சி இருக்குற மாவ கரண்டி போட்டு மறுபடி கலக்காம, நொரச்ச  மாவ அப்படியே கரண்டில மோந்து இட்லி வார்க்கணும். இப்படி செஞ்சன்னு வசிக்க அப்போதான் வெடிச்ச எலவம்பஞ்சி மாதிரி தொட்ட எடமெல்லாம் மெதுமெதுன்னு இருக்கும் இட்லி. சொல்லிட்டு செத்துபோச்சி பாட்டி... பாவம்.
பாட்டி போன துக்கத்துலயும் சொல்லி குடுத்தத மறக்கல சாந்தி!

மன்னன் சாந்திய பார்த்தது ஒரு தனி கதை...
ஒரு பொண்ணு கூட ரெண்டு, மூணு நாள் தொடர்ந்து பேசிட்டா அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுமே...அந்த வயசுல தான் மன்னன் சாந்திய பார்த்தது. ஒரு பத்து, பதினோரு வயசிருக்கும்!
அப்போ சாந்தி அதோட பாட்டிகூட இட்லி கடைல ஒத்தாசையா இருக்கும். மன்னனோட அம்மாவுக்கு அம்மை வார்த்துடுச்சி. சித்தி ஊருல இருந்து வரவரைக்கும் மூணு நாளுக்கு இட்லில காலத்த ஓட்ட முடிவெடுதுட்டாங்க அம்மா. கைல ரெண்டு ரூபா குடுத்து மகனே மன்னா போய் இட்லி வாங்கியாடான்னு சொன்னாங்க.

போனான் பய; இட்லிக்கு ஒரு கிண்ணம், சட்னி சாம்பாருக்கு  ரெண்டு தூக்கு தூக்கிகிட்டு.
அந்த பக்கம், சொல்லி வச்ச மாதிரி சாந்தியோட பாட்டி சபரிமலைக்கு போய்ட்டாங்க.  

மோத நாள் ஒன்னும் பெருசா பேசிக்கல ரெண்டு பெரும்.
ரெண்டாவது நாள்..சாந்தி சொல்லுச்சி...ரெண்டு இட்லி மிச்சமா வச்சி இருக்கேன்னு. அங்க ஆரம்பிச்சது இவனுக்கு சாந்தி மேல காதல்!

ரெண்டு இட்லிக்கு வாழ்க்கையவே அடகுவைக்க துனிஞ்சிட்டானே பாவின்னு நீங்க நெனச்சா அது தப்பே இல்ல! ஏன்னா அது தான் நடந்தது...காதல் பிற்காலத்துல கல்யாணத்துல முடிஞ்சிடுச்சி!

கல்யாணம் பண்ற அளவுக்கு ஆள் வளந்துட்டான், அறிவு...சாந்திய மொதமொதல்ல பார்த்த எடத்துலயே நின்னுடுச்சி இவனுக்கு.
கொழந்தை, மனசுல வஞ்சம் வச்சிக்காது ஆனா...எதுக்குன்னே தெரியாம ஒரு புடிவாதத்த வச்சிருக்கும்பாருங்க...அந்த மாதிரி பயலாயிட்டான். கட்டுனா சாந்திய தான் கட்டுவேன்னு நிக்கிறான் ரெண்டு கால்ல!
சாந்திக்கு வரன் பார்த்தப்ப அவுக அப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்னு ஒரு கண்டீசன போட்டாரு. அதுல மன்னன் வீட்டுல யாருக்கும் உடன்பாடு இல்ல. ஆனா விடுவானா...கல்யாணம் பண்ணிட்டான் ஒரே புடியா. இப்போ வீட்டோட மாப்பிள்ளையாவும் ஆயிட்டான்!

மழை வரப்போ ஒதுங்குனா குடை மாதிரி இருந்து காக்குற மரம், மழை நின்னு காத்தடிச்சா எப்படி கீழ நிக்கிறவன மொத்தமா நனைச்சி விட்டுடுதோ அந்த மாதிரி கொ(கு)ணம் மாறி போனாங்க மன்னனோட சொந்தபந்தங்க!

வந்துது மொத வெ(வி)னை மன்னனுக்கு தாலி பிரிச்சி கட்டுற விசெஷத்துல!

வளரும்.

எண்ணமும் ஆக்கமும் - அசோக்.மு
http://ashokmrin.blogspot.jp/2014/06/blog-post.html