தாயுமானவள் !

B. Sc. படித்துக்கொண்டிருக்கும் நான், அன்று தான் ஒரு கம்ப்யூட்டர் சென்டெரில் பகுதி நேர Instructor ஆக பணியில் சேர்ந்தேன்.
Algorithm is nothing but step by step instructions used to solve the given problem என நடத்திக்கொண்டிருந்தேன். வகுப்பறையில் இருந்தவர்களில் ஒருவள் மட்டும் மிக வசீகரமாக இருந்தாள். யாரவள்? என்ன பெயர்? எதுவும் தெரியவில்லை.
அவளிடம் மட்டும் பெயர் கேட்டால் தவறாகிவிடுமென அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அவர்களுடைய பெயர், படிப்பு போன்ற விவரங்களை சொல்ல சொன்னேன். அனைவரும் சொல்லிக்கொண்டே வந்தார்கள். நான் எதையும் காதில் வாங்காமல், அவள் முறைக்காக காத்துக்கொண்டிருந்தேன், வந்தது. பெயரை சொல்லப்போகிறாள் என என்னுடைய காதுகளை தீட்டி வைத்தேன். ஆனால் அவள் சொன்னது, "சாரி நான் ஸ்டூடென்ட் இல்லை". அதனாலென்ன பெயர் சொல்லுங்கள் என கேட்க நினைத்தேன். ஆனால் வேண்டாமென விட்டுவிட்டேன்.
க்ளாஸ் முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். இவள் மட்டும் இன்னும் சென்டரிலேயே இருந்தாள். எனக்கு அவளிடம் எப்படியாவது பேசவேண்டும் போல இருந்தது. மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பலமாக காற்று வீசியது. காலியாக இருந்த என்னுடைய சட்டை பாக்கெட்டில் காற்று வேகமாக உள்ளே சென்று அதைவிட வேகமாக வெளியேறியது. கிடைத்தது ஒரு உபாயம். நேராக அவளிடம் சென்றேன். ச்சே, காத்துல மேல்பாக்கெட்ல வச்சி இருந்த பத்து ரூபா அடிச்சிகிட்டு போய்டுச்சி என்றேன். அடடா...என்றாள். அப்பாடா பேசிவிட்டோமென எனக்கு ஒரே குஷி.

ஏன்டா வீட்ல இருந்து வெளில கெளம்புறப்போ தலைகீழா நின்னுட்டு கெளம்புரவன் நீ. உன்னோட பாக்கெட்ல பத்து ரூபாவா?

சைக்கிளுக்கு காத்து அடிக்கிறதுக்கு கூட பத்து பைசா கெடையாது, உனக்கு எதுக்கு இந்த விளம்பரம்? என எவனோ எனக்குள்ளிருந்து கேட்டான். அவனை எல்லாம் யார் சட்டை செய்தது.
அடுத்த நாளும் வந்தாள். என்னால் அவள் யாரென தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. கம்ப்யூட்டர் சென்டெர் ஓனரிடம் விசாரித்தேன். அதுவா, அவள் புஷ்பா, என்னுடைய தங்கை. B.Sc.படிச்சிமுடிச்சிட்டு இப்போ வீட்ல சும்மா இருக்கா. நான் தான் டைம் பாஸ்க்காக இங்க வரசொன்னேன்.
B.Sc முடிச்சிட்டாங்களா அப்போ என்னை விட ஒரு வயது மூத்தவர். இது தெரியாம அவசரப்பட்டு நேத்து நைட் தூங்காம விட்டுட்டனே. சரி இனிமே நல்ல நண்பர்களா இருப்போம்னு மனச தேத்திக்கிட்டேன்.
புஷ்பா சென்டரிலேயே இருந்ததால், பல விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருப்போம். எங்கள் நட்பு பலமானது.
ஒரு நாள் நான், புஷ்பா மற்றும் பலர் சென்டரின் கடைசி அறையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் கிளம்பும் நேரமாதலால், சரி நான் கெளம்புறேன் என எல்லோருக்குமாக பொதுவில் சொல்லிவிட்டு கிளம்பினேன். செருப்பு விடும் இடம் வரை வந்துவிட்டேன். எனக்குப்பின்னால் ஏதோ சத்தம், திரும்பிப்பார்த்தால் புஷ்பா!.
நாளைக்கி சண்டே நீங்க சென்டர்க்கு வந்தா நானும் வரேன் இல்லனா வரவேணாம்னு பாக்குறேன். நீங்க வரீங்களா ? என கேட்டாள்.
எனக்கும் சென்டர்க்கு வரவேண்டிய வேலை இருக்கு, நானும் வருவேன் என இல்லாத வேலையை இருப்பது போல சொன்னேன். அவள் வாசல் வரை வந்து என்னை வழியனுப்பியதும், நான் இருக்குமிடத்தில் அவள் இருக்க நினைப்பதும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
B.Sc. செமெஸ்டர் எக்ஸாம் வந்துவிட்டது. நான் அதுவரை ஐந்து அரியர்ஸ் சம்பாதித்திருந்தேன். புஷ்பா அரியர்ஸ் பற்றி விசாரித்தாள், சொன்னேன். இங்க பாருங்க, இந்த Semester ல எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடனும். எத்தன அரியர்ஸ் வைக்கிறீங்களோ, அத்தனை நாள் நான் உங்க கூட பேசமாட்டேன் என்றாள்.
இது என்னடா வம்பு, சுட்டுப்போட்டாலும் நமக்கு வராதது படிப்பு. அதில் இப்படி ஒரு சோதனையா. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த Semester ல் இரண்டு அரியர் வைத்துவிட்டேன். புஷ்பாவிடம் எப்படி சொல்வது. இரண்டு நாள் பேசாமல் இருப்பதென்பதை என்னால் நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு புஷ்பாவிடம் சென்றேன்.
புஷ்பா மொத்தம் பதினொரு Subject. அதுல ஒன்பது பாஸ். ரெண்டு fail. நீங்க என்கூட ஒன்பது நாள் பேசணும். அதுல ரெண்டு அரியர்ஸ் கழிச்சிடுங்க. So , நீங்க என்கூட எழுநாள் பேசினா போதும். புஷ்பா என்னோட பேசாமல் இருந்துவிட கூடாதென ஏதேதோ உளறினேன்.
அதை அப்படியே புரிந்துகொண்ட புஷ்பா,
உங்க கூட பேசாமல் என்னால மட்டும் இருந்துடமுடியுமா? என்றாள்.
நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் என்பார்களே, அதை அன்று தான் உணர்ந்தேன்.
நம்மைப்போலவே தான் புஷ்பாவும் இருக்கிறாள். இது தெரியாமல் நான் வேறு அரியர்ஸை குறைத்துவிட்டேன்.
நண்பர்கள் மத்தியில் மரியாதை இருக்காதே.. என்ன செய்யலாம்... சரி அடுத்த Semester ல் புடிச்சதை விட்டுடலாம்!
ஒரு நாள், அவசரத்தில் ஒரு சட்டையை அணிந்தேன். பிறகு தான் தெரிந்தது அதில் ஒரு பித்தான்(Button) இல்லையென. இனிமேல் கழட்டி மாட்டிக்கொண்டிருக்க முடியாது இப்படியே இருக்கட்டும். இந்த விஷயம் நமக்கும் சட்டைக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என கிளம்பி சென்டருக்கு போனேன்.
அங்கே புஷ்பா...என்னைப்பார்த்த மாத்திரத்தில் கேட்டாள்,
என்ன சட்டைல ஒரு Button அ காணோம்?
திருட்டுமுழி முழித்தேன்.
ஒரு காலேஜ் ஸ்டுடென்ட் இந்த மாதிரியா டிரஸ் பண்ணுறது? ஒரு descency வேண்டாம்? நீங்களே இப்படி இருந்தா, உங்க கிட்ட படிக்கிற பசங்க எப்படி இருப்பாங்க?
நான் பாக்கியராஜ் மாதிரி விழித்தேன்.
இந்தாங்க அட்லீஸ்ட் இந்த Safety Pin ஆவது போடுங்க என்றாள்.
இந்த அதட்டல் என்னை கவர்ந்திருந்தது. என்மீதான அவளின் அக்கறை என் ஆழ்மனதில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.
அடுத்த நாள், மிக கவனமாக நல்ல சட்டை ஒன்றை அணிந்து, ஒன்றுக்கு இரண்டுமுறை பித்தான்களை சரி பார்த்துக்கொண்டேன். சென்டருக்கு சென்றேன்.
அங்கே புஷ்பா. அவள் முன்னாடி விறைப்பாக நின்றேன்.
இன்னைக்கி எல்லா button ம் போட்டு இருக்கேன் என்றேன்.
அது சரி, தலை ஏன் வாரல என்றாள்.
சுருக்கென்றது எனக்கு. அடடா சட்டையை சரி பார்க்கும் அவசரத்தில் தலை சீவாமல் வந்துவிட்டேன். மீண்டும் அதே அதட்டல்கள். மீண்டும் அதே மாற்றங்கள் என்னுடைய ஆழ்மனதில்.
எனக்கு அவள் மீது இருப்பது என்ன? அவளுக்கு என்மீது இருப்பது என்ன என நான் அனுதினமும் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில்....
ஒருநாள், புஷ்பா யாரோ ஒருவனிடம் சென்டரில் பேசிக்கொண்டிருந்தாள்.
பேசிமுடித்தவுடன், அந்த நபரைப்பற்றி கேட்டேன்.
அவரு பேரு மாணிக்கம். எங்க அண்ணனோட Friend . ரொம்ப நல்லவரு என்றாள்.
ரொம்ப நல்லவர்னா தேரடி வீதியில அவருக்கு ஒரு சிலைவச்சிடலாம். அதுக்காக நீங்க யார் கூடவும் ஜாஸ்தி பேசவேண்டியது இல்லை என கத்திவிட்டு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

வரும்வழியில், தம்பி.... என யாரோ என்னை கூப்பிட்டார்கள்.
திரும்பி பார்த்தால், என்னுடைய மனசாட்சி.
அவள் யார் கூட பேசணும், பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் நீ அவளை பத்தி என்ன நெனச்சிகிட்டு இருக்க? என்றது.
டேய் அததாண்டா நான் உன்னை கேக்கறேன். ஒழுங்கா சொல்லு, புஷ்பாவ பத்தி நீ என்ன நெனச்சிகிட்டு இருக்க என நானும் பதிலுக்கு கேட்டேன்.
அது என்னவென்று எனக்கும் தெரியாது என சொல்லி மறைந்துவிட்டது.
அடப்பாவிங்களா ஏன்டா என்னை இப்படி இம்சை பண்ணுறீங்க?
.....
புஷ்பா Windows 95 OS கம்ப்யூட்டர் வாங்கி இருந்தாள். நான் DOS ஐ தவிர வேறெதையும் பார்த்திராதவன். Windows 95 எப்படி தான் இருக்கு என பார்க்க புஷ்பா வீட்டிற்கு சென்றேன். அவள் வீடு ஊரை விட்டு 8 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. நான் சைக்கிளில் தான் சென்றேன்.
என்னைப்பார்த்ததும், இவ்வளவு தூரம் சைக்கிள்லயா வந்தீங்க? என கேட்டாள்.
ஆமாம் சரியான கால் வலி என்றேன்.
அப்படியா, நான் வேணும்னா தைலம் தேச்சி விடட்டுமா என்றாள். எனக்கு பகீரென்று இருந்தது. என்னடா இது, அக்கறையின் உச்சமாக இருக்கிறதே என.
அன்று வீடு திரும்பியதிலிருந்து எனக்குள் ஒரே குழப்பம். அவள் என்மீது வைத்து இருப்பது சாதாரண அன்பு, அக்கறை தானா இல்லை காதலுமா? விளங்கவில்லை.
மறுநாள் சென்டெரில் அவளை பார்த்தபோது வெகு சாதாரணமாக இருந்தாள். எனக்கு தான் ஏதோ சரி இல்லாதது போல இருந்தது. என்ன புஷ்பா எப்படி இருக்கீங்க?
எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. நான் மேல படிக்கிறேன்னு தான் சொன்னேன். ஆனா அம்மா தான் பிடிவாதமா சம்மதிக்க வச்சிட்டாங்க என்றாள்.
எனக்கு இது நல்ல சேதியா கெட்ட சேதியா என்றே புரியவில்லை. இதற்கு நான் எப்படி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. உணர்ச்சியே இல்லாமல் "அப்படியா" என்றேன்.
ஆமா நாளைக்கி எங்க குடும்பத்துல இருந்து எல்லாரும் மாப்பிள்ளை பாக்க போறாங்க. நீங்களும் அவுங்க கூட போயிட்டு வரணும்.
இடி மேல் இடி விழுந்தது.
மாப்பிள்ளை எப்படி இருக்காரு? போட்டோ பார்த்தீங்களா?
போட்டோ பாக்கல ஆனா மாப்பிள்ளை Red Rose கலர் என்று சொன்னார்கள்.
மறுநாள் மாப்பிள்ளையை பார்த்தேன். கறுப்பாக இருந்தார். Red Rose ற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.
அடுத்த நாள், புஷ்பா என்னிடம், மாப்பிள்ளை பார்த்தீங்களா? கலர் எப்படி?
Red Rose தான் ஆனா பூத்து பத்து நாள் ஆன மாதிரி இருக்கார் என்றேன் கடுப்புடன்.
.....
கல்யாணத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள். அடுத்த வாரம் கல்யாணம்.
புஷ்பா கல்யாண சடங்குகள் நிமித்தமாக சென்டருக்கு வருவதில்லை.
அவள் இல்லாத சென்டருக்கு நானும் போவதில்லை.
திடீரென எனக்கு காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது.
இப்போது எனக்கு 106 டிகிரி. ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிவிட்டேன். டாக்டர் கையை பிசைந்துகொண்டு இருக்கிறார். இன்னும் ரெண்டு டிகிரி அதிமானா உயிருக்கே ஆபத்து. I will do my level best என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
எனக்கு நினைப்பெல்லாம் புஷ்பாவின் மீதும் கல்யாணத்தின் மீதும் இருந்தது.

திடீரென புஷ்பா, அவள் அம்மா, அப்பா மற்றும் வருங்கால கணவருடன் உள்ளே நுழைந்தாள். படுத்துக்கொண்டிருந்த என்னை வாரியனைத்துக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுகிறாள். உங்களுக்கு இப்படி ஆனத ஏன் என்கிட்டே சொல்லல? சென்னைக்கு கெளம்பி போய் பெரிய டாக்டர்கிட்ட காட்டவேண்டியது தான... கவலைபடாதீங்க நான் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்கிறாள்.
நான் கண்ணீருடன் அவளின் அருகாமையின் பரவசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
அவளின் அணைப்பின் வெம்மையை நான் இதற்கு முன் எங்கோ உணர்ந்திருக்கிறேன். அவள் ஸ்பரிசம் தரும் பாதுகாப்பை நான் கடந்து வந்திருக்கிறேன். இந்த தூய அன்பினை நான் பருகி இருக்கிறேன். ஆனால் எங்கே? எப்போது? யாரிடம்?
.......புரிந்தது.......அது என் தாயிடம்.
குடும்பத்தினர் அனைவரும் இருக்கையில், இப்படி என் மீது பாசமழை பொழிகிற இவள் நிச்சயம் காதலியாக இருக்க முடியாது. காதலிக்கு இடம் பொருள் ஏவல் என பல தடைகள் உண்டு. காதலுனுக்காக உயிரையும் தருவேன் என காதலி கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் குழந்தைக்காக உயிரை மாய்த்திருப்பாள் தாய்.
இப்பொழுதுதான் அவளின் தாயுள்ளம் எனக்கு புரிந்தது . ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் மட்டும் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதை விட உன்னதமான சில உறவுகளும் இருக்கலாம் என்பதை தீர்க்கமாக புரிந்துகொண்டேன்.
என்னருகிலிருந்து எழுந்தாள். கல்யாணத்திற்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அதுக்குள்ள நீங்க கண்டிப்பா நல்லா ஆயிடுவீங்க. கல்யாணத்துல உங்களுக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் ஓகே வா? என்றாள்.
தெளிந்த மனதுடன்...சரி என்றேன்.
அப்போ நான் கெளம்புறேன்....கல்யாணத்துல பார்போம் என சொல்லிப்பிரியும் அவள்....

என் சகோதரி மட்டும் அல்ல, என் உற்ற தோழி மட்டும் அல்ல...........
என் தாயும் ஆனவள்........ தாயுமானவள்.!

-Ashok M

துரும்பு

அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பவன் கடவுள் மட்டும் இல்லை அவனும் தான்.
நண்பர்கள் என்று நான்கு பேர் இருந்தால், அதில் ஒருவனாக அவன் நிச்சயம் இருப்பான். அவன், சக நண்பர்களுக்கு மத்தியில் அடிமையாக இருப்பவன். வாய் திறந்து எதை சொன்னாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆட்படுகிறவன். எதற்கும் உதவாத ஒரு துரும்பை போல பாவிக்கப்படுகிறவன். நானும் அவனை பார்த்து இருக்கிறேன். இதோ அவன் உங்கள் முன்னாள்.

நாங்கள் நான்கு பேர் நண்பர்கள். எங்களில் "அவன்" - மகேஷ் (பெயர் மாற்றப்படவில்லை). மகேஷை நான் முதலில் சந்தித்தது, கல்லூரியின் முதல் நாள் தான். அன்று பல மாணவர்களின் பெற்றோரும் வந்து இருந்தனர். அனைவருக்கும் கல்லூரியிலேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் சாப்பிட்டு முடித்து விட்டு வந்து கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு பின்னால் இருந்து ஒரு பெருங்குரல் 5 கிலோமீட்டருக்கு கேட்கிறமாதிரி "நைனா போன் சேஸ்தாவா நைனா" . யாருடா அவன் STD ய Local call ல பேசுறவன்னு திரும்பி பார்த்தா நம்ம மகேஷ். கல்லூரி வாசலில் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவனுடைய அப்பாவை சாப்பிட்டாச்சா என்று கேன்ட்டீன் வாசலில் இருந்தே விசாரித்துக்கொண்டிருக்கிறான். அவனை அப்பொழுதே குறித்து வைத்துக்கொண்டேன். 

மகேஷ், எங்களில் "அவனாக" ஆனதற்கு மகேஷ் தான் காரணம்.
ஒரு நாள் கல்லூரியில் ஒரு Form கொடுத்து அதை Fillup செய்ய சொன்னார்கள். அதில் Sex : Male / Female என ஒரு Column இருந்தது. மகேஷ் சீரியஸாக என்னிடம் வந்து, மச்சி இதுல எதடா செலக்ட் பண்ணனும் என கேட்டான். நடுவுல இருக்க "/ "ஐ டிக் அடிடா என்றேன். சரி என சொல்லி டிக் அடித்தான். இவ்வளவு நல்லவனாடா நீ என நினைத்துக்கொண்டேன். இது தான் மகேஷிற்கு "அவனாக" ஆனதன் முதல் படி.
இரண்டாவது படி, சோறு.
அவன் சாப்பிடுவதை பார்த்தால் மனிதனின் குணம் ஒன்று கூட அதில் தெரியாது. பேய் தீனி தின்பான். ஆந்த்ரா மெஸ்ஸிர்க்கு போனால், ஏதோ அன்றுதான் வாழ்கையின் கடைசி நாள் என்பது மாதிரி சாப்பிடுவான். இனி ஒரு வாரத்திற்கு சாப்பிடமாட்டான் என நினைப்போம். ஆனால் அடுத்த நாளும் அதே Performance கொடுப்பான்.
ஒரு நாள் இவனுடன் ஒரு கல்யாணத்திற்கு சென்றேன். மணமக்களை வாழ்த்திவிட்டு, போன வேலையை கவனிக்க சென்றோம். இலையை பார்த்த உடனே மகேஷ் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு எரிந்தது. தின்றான் தின்றான் தின்றுகொண்டே இருந்தான். நாங்கள் இருந்த பந்தியில் அனைவருமே முடித்து விட்டு எழுந்து சென்றுவிட்டார்கள். நான் இவனுடன் சென்ற பாவத்திற்காக உடன் அமர்ந்து இருந்தேன். இப்போது தான் வத்தகுழம்பிற்க்கு வந்திருக்கிறான். இலை எடுப்பவர்கள் இவனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக வத்தகுழம்பை முடித்தான். பந்தி பரிமாறுபவர், அடுத்தது என்ன சார்? ரசமா மோரா என கேட்டார். இவன் சாம்பார் என்றான்!!!. மகேஷை தவிர அங்கிருந்த எல்லோருக்கும் தூக்கி வாரிபோட்டது. இனி என் வாழ்க்கையில் இவனுடன் சாப்பிட போக கூடாது என முடிவெடுத்தேன்.

இத்துடன் முடியவில்லை அவனின் பிரதாபம். கல்லூரி முடித்து, நாங்கள் ஒரு குழுவாக சென்னையில் தங்கி இருந்த நேரம், ஒரு நாள், அவனுடைய மாமா அவனை பார்க்க வரப்போவதாக சொன்னான். எட்டு மணிக்கு வரவேண்டிய மாமா, பத்து மணி ஆகியும் வரவில்லை. என்னுடைய சக நண்பன் ஒருவன் பால்கனியில் நின்றுகொண்டு கிழே பார்த்துக்கொண்டிருந்தான். மகேஷ், உங்க மாமா வந்துட்டாருடா. உன்னை கிழே கூப்புடுறாரு என்றான். உடனே மகேஷ், "நைனா ஒஸ்தான் நைனா" என்று இங்கிருந்தே கத்தினான். கிழே கிளம்ப எத்தனித்த அவனை நிறுத்தி, டேய் மாமா னு சொன்ன, நைனா னு கூப்பிடுற என்றேன். குழந்தைல இருந்தே அப்படி பழகிடுச்சி, எங்க மாமாவ மட்டும் இல்லை, எங்க ஊர்ல இருக்க எல்லாரையுமே நான் அப்படி தான் கூப்பிடுவேன் என்றான்!!!!. கண்ணை கட்டியது எனக்கு.
பாரதியார் சொன்னது போல, காலை எழுந்த உடன் படிப்பான். The Hindu. முதல் பக்கம், முதல் வரியில் இருந்து ஆரம்பித்து, கடைசி பக்கத்தின் கடைசி புள்ளியில் முடிப்பான். எடிட்டர் கூட அப்படி படித்து இருக்க மாட்டார். வரி விளம்பரத்தை கூட விடாமல் படித்து விடுவான்.இதிலென்ன பிரமாதம் என்கிறீர்களா? அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. இந்த விஷயம் அவனை தவிர எல்லோருக்கும் தெரியும். A விலிருந்து Z வரை தெரிந்தாலே ஆங்கிலம் தெரிந்த மாதிரி தான் என்பது அவன் எண்ணம்.
உலககோப்பை கால்பந்தாட்டம் நடந்துகொண்டிருந்த சமயம், இறுதி ஆட்டத்திற்கு யார் தகுதி பெறுவார்கள் என எல்லோரும் அளசிக்கொண்டிருந்த நேரம். எங்கிருந்தோ வந்தான் மகேஷ், என்னடா மேட்டர் என்றான். சொன்னோம். உடனே அவன், Finals க்கு, Brazil and Germany தான் போகும். ஆனா Cup, கண்டிப்பா Argentina க்கு தான் எழுதி வச்சிக்கோங்க என்றான்.!!!

இப்படியான பல்வேறு காரணங்களால், மகேஷ், "அவன்" ஆகி விட்டான்.

ஒரு நாள் கல்லூரி நண்பன் ஒருவன் எங்களை பார்க்க வந்து இருந்தான். எங்கடா மகேஷ் என்றான். அவன் Toilet கழிவிகிட்டு இருக்கான்டா என்றேன். இரண்டு நிமிடம் பொறுத்து மகேஷ் பாத்ரூம் ல் இருந்து டூத் ப்ரஷ்ஷோடு வெளியில் வந்தான். வந்த நண்பன், என்னடா பண்ணிக்கிட்டு இருந்த உள்ளே? பல் தேய்ச்சிகிட்டு இருந்தேண்டா என்றான் மகேஷ். வந்தவன் என்னைப்பார்த்து முறைத்தான். நானும் அததாண்டா உனக்கு புரியிற மாதிரி சொன்னேன் என்றேன்.

என்றைக்கும் இல்லாமல் ஒரு நாள், மகேஷ் அவனுடைய குடும்ப கதையை சொல்லிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு வார்த்தைக்கு மேல் பேசவிடாத நாங்கள் அன்று அவனை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தோம். எப்படி இவனை நிறுத்தலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில், விதி அவனை இப்படி பேச வைத்தது.
எங்க பாட்டிக்கு, பதினாறு வயசுல கல்யாணம் ஆச்சி மச்சி. அவங்களோட பதினெட்டு வயசுல எங்க தாத்தா செத்து போய்ட்டாரு. ரெண்டு வருஷம் தாண்டா பூவோடயும் பொட்டோடையும் இருந்தாங்க.
அப்படியாடா உங்க பாட்டிக்கு எத்தன குழந்தைங்கடா என கேட்டேன்.
மூணு மச்சி என்றான்.
அதெப்படிடா ரெண்டு வருஷத்துல மூணு குழந்தை?
எங்க தாத்தா சிங்கம்டா.
ஓ! மனுஷன் இல்லையா...சிங்கமா? அப்போ ரெண்டு வருஷத்துல மூணு குட்டி ரொம்ப கம்மியாச்சே மச்சி என்றேன்!!!.

இப்படி இருந்த நாங்கள், கால சக்கரத்தில் அகப்பட்டு ஆளுக்கொரு மூலையாக பிரிந்து விட்டோம்.
ஐந்து வருடங்கள் கழிந்தன.....

என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு Phone செய்து, மச்சி இன்னைக்கி நைட் மகேஷ் டிவில வரானாம்டா என்றான். உடனே நான், எதுக்குடா? சாராயம் காய்ச்சி மாட்டிக்கினானா என்றேன். தெரியலடா டிவி புரோக்ராம் பாரு என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.
இவன் எதுக்கு டிவி ல வரான். வர வர எவனெவன் தான் டிவில வரதுனு இல்லாம போய்டுச்சி. அன்று இரவு, அட நிஜம் தான். மகேஷ் டிவி ல பேசுறான்.
அவன் பேசியதில் இருந்து, அவன் ஒரு பெரிய சாதனை படைத்தது தெரிந்தது எனக்கு.
Wallace Stevens Award for English Literature ஐ வாங்கி இருக்கிறான்.
இவனா அவன்? என்னால் நம்பவே முடியவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுடைய நண்பர்கள் பற்றி சொல்லுங்கள் என கேட்டார். என்னைப்பற்றி ஏதாவது சொல்லிவிடப்போகிறான் என பயந்துகொண்டிருந்த நேரத்தில் சொல்லியேவிட்டான்.
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என்னை எப்போதும் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு, நான் குறைந்தது மனிதனாகக்கூட தெரிந்தது இல்லை. ஆனால், அது தான் என்னை இந்த சாதனை படைக்க தூண்டியது. அவர்கள் என்மீது எரிந்த ஒவ்வொரு கல்லையும் வைத்து கோட்டையை கட்டிக்கொண்டேன். அவர்கள் என்மீது எரிந்த ஒவ்வொரு ஈட்டியையும் என்னை செதுக்கிக்கொள்ள ஒரு உளியாக பயன்படுத்திக்கொண்டேன் இந்த நேரத்தில், என்னுடைய அந்த நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றான்.
என்னை யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. இப்படி ஒருவனையா அப்படி கேவலப்படுத்திவிட்டோம் என நினைத்து, என்னையே எனக்கு பிடிக்கவில்லை. சரி போனது போகட்டும் இனி யாரையும் துரும்பை போல கேவலமாக நினைக்க கூடாது. கேலி கிண்டல் எல்லாத்தையும் இதோடு மூட்டை கட்டிவிடவேண்டும் என முடிவெடுத்தேன்.
அந்த நேரம் பார்த்து பக்கத்து அறையில் தங்கி இருக்கும் பையன் என்னிடம் வந்து,
அண்ணே அண்ணே Volley Ball ல சாதிச்ச சதிஷ் சிங் வர்மா மாதிரி இன்னொருத்தர் எப்போண்ணே வருவாரு என கேட்டான்.
அதை சதிஷ் சிங் வர்மாவோட அப்பாவ தாண்டா கேக்கணும் என்றேன்.
ஹும் என்னை திருத்தவே முடியாது...!

இழந்த சொர்க்கம்

கி. பி. 1999, கணினி பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் நன்கு முயற்சி செய்தால், வாழ்க்கை முழுக்க வசந்த காலம் தான். எனவே எப்பாடுபட்டாவது, பார்கவியை இந்த வருடத்திற்குள் என்னை காதலிக்க வைப்பதென முடிவெடுத்தேன்.

"பார்கவி"....பொங்காமல் இருக்கும் "பொங்கல்" ...மன்னிக்கவும்...."எரிமலை". அவள் ஒரு அபாய வளைவு, பால் வீதியின் இருண்ட பகுதி, வரையறுக்க முடியாத கணிதம், சுருக்கமாக, "பார்கவி".

கல்லூரியில் இருந்து 40 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு நகரத்தை சேர்ந்தவள். ஊர் பெயர், கள்ளிப்பாடி. அவளுடைய ஊர் முழுக்க செம்மண் ரோடு தான். தார் ரோட்டை பார்க்கவேண்டுமானால், மாட்டு வண்டியை கட்டிக்கிட்டு எட்டு கல்லு தூரத்தில் உள்ள கூட்ரோட்டுக்கு வரவேண்டும்.

அவளின் அழகில் மயங்காத விரிவுரையாளர்களே இல்லை எனலாம். மாணவர்களை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. ஒரு சக மாணவன், அவளுக்கு காதல் கடிதம் எழுதினான். அவனுக்கு "பதில் கடிதம்" HOD இடமிருந்து வந்தது. இவன், அவன் என்று இல்லை. எவனாக இருந்தாலும், HOD இடம் போட்டு கொடுத்துவிடுவாள். ஆனால், அவளை தொந்தரவு செய்தால் மட்டும் தான் இப்படி. மற்றபடி MUTE போட்ட DVD போல இருப்பாள்.

இவளை தான் என்னை காதலிக்க செய்ய வேண்டும். Quite Difficult Task You Know?... Peter விட Warm Up செய்து கொள்கிறேன்.

சில உபாயங்களை வகுக்கிறேன். அதில் முதல் வழி, கவிதை எழுதி அதை அவளிடம் கொடுப்பது.

இரவு முழுவதும் சிந்தித்தேன், கண்ணில் பட்டது அனைத்தையும் கவிதையாக்க முயற்சித்தேன். எழுதி, எழுதி வீடு முழுக்க குப்பை ஆனது தான் மிச்சம். இருந்த குப்பைகளில், சுமாரான இரண்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு பார்கவியிடம் சென்றேன்.
பார்கவி, உன்னை பற்றி நான் இரண்டு கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல் என சொல்லிக்கொண்டே என்னிடம் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினேன்.

1. பார்கவி,
நீ பார்த்ததனால்,
நானும் ஒரு கவி!!!
2. நீர்மூழ்கி கப்பலான நீ,
கப்பலானால்....
நான், நீர்மூழ்கிப்போவேன்!!!!
படித்து விட்டு, அது சரி, கவிதைகள் எங்கே? என கேட்டாள். இப்பொழுது இது ஒரு மொக்கை ஜோக். ஆனால் அப்பொழுது எனக்கு சிரிப்பும், அழுகையும் சேர்ந்து வந்தது. கவிதை, வர வழியில் காக்கா தூக்கிகிட்டு போய்டுச்சி என்று என்னுடைய தன்மானத்தை விட்டு கொடுக்காமல் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டேன்.

கவிதை வழி, கேவலமாக முடிந்து விட்டதால், அடுத்த உபாயத்தை முடிவு செய்தேன். அது, பார்கவியின் உற்ற தோழியின் உதவியை நாடுவது.

அப்படி ஒருவள் இருந்தாள். அவள் பெயர், பவித்ரா. இங்கு பவித்ராவைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள்.அவள் புடவை கட்டினால் கொடி கம்பத்தில் துணி காய போட்டது மாதிரி இருக்கும். அவள் நடந்தால் சுமார் அறை ஏக்கர் நிலத்தை அவளுடைய புடவை பெருக்கி சுத்தம் செய்து கொண்டு போகும். கஞ்சி போட்டு மொரு மொருவென இருக்கும் புடவையின் Epicenter ல் பென்சிலால் கோடு போட்டது போல ஒல்லியாக இருப்பாள். அவளுடைய கண்ணாடி வழியாக நிலாவை பார்த்தால், நிலவில் இருக்கும் குளம் குட்டை கூட தெளிவாக தெரியும். பவித்ராவை பற்றி இப்படி வர்ணிக்கிற நான் அமீர் கான் மாதிரி இருப்பேன் என்று தவறாக நினைக்காதீர்கள். பவித்ரா கதை எழுதினால் தான் என்னுடைய லட்சணம் உங்களுக்கு தெரியும்.
அன்று காலை, பேருந்து நிறுத்தத்தில் பவித்ரா கல்லூரி பேருந்துக்காக காத்திருந்தாள். அவள் அருகில் சென்றேன், எப்படி ஆரம்பிப்பது...ஒரு வழியாக முடிவு செய்து, இப்படி ஆரம்பித்தேன்., பவித்ரா, புடைவைல நீ ரொம்ப அழகா இருக்க.
முகத்தில் ஒரு சலனமே இல்லாமல் "ஓஹோ" என்றாள். ஏற்கனவே இப்படி தான் நினைத்துக்கொண்டு இருப்பாள் போல இருக்கிறது. பவித்ரா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என சொல்ல நினைத்தேன்...ஆனால் வந்த வேலைக்கு வேட்டு வைத்த மாதிரி ஆகிவிடுமே என அடுத்த கணையை தொடுத்தேன். பவித்ரா, நீ ஏன் Contact லென்ஸ் அணிய கூடாது? "இப்போ உனக்கு என்ன வேணும்?" என சீறினாள். அடடா ஏதோ புரிந்து விட்டது போல இருக்கே, என நினைத்துக்கொண்டே, பவித்ரா, நீ எனக்கு ஒரு உதவி செய்யனுமே, பார்கவி கிட்ட என்னை பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லி......... "என இழுத்தேன், "எடுத்து சொல்லி...."? என முறைத்தாள்... ஒன்னும் இல்லை நான் கிளம்பறேன் என சொல்லி விட்டு அங்கு இருந்து எகிறி விட்டேன். ஹும்.. ஒன்றுக்கும் உதவாத இவளை பற்றி ஒரு பத்தி Intro வேறு.

மூன்றாவது உபாயம், நேராக பர்கவியிடமே காதலை சொல்லி விடுவது...

யாரிடமும் பேசாத, பழகாத பார்கவி, என்னுடைய மூதாதையர்கள் செய்த புண்ணியத்தால், என்னிடம் மட்டும் சிரித்து பேச ஆரம்பித்து இருந்த நேரம்.
ஒருவேளை, பார்கவி என்னை காதிலிக்கிறாளா?. காதல் இருந்தாள் கண்களில் தெரியும் என்றான் என்னுடைய நண்பன். அப்படியா, இன்னைக்கி பார்த்துடறேன்.

அன்று பார்கவியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவளுடைய இரண்டு கண்களையும் உற்று நோக்கினேன். இடது கண் சற்று வீங்கி இருந்தது தான் தெரிந்தது. என்ன ஆச்சி பார்கவி Left கண் சிகப்பா வீங்கி இருக்கு. நேத்து நைட் Full லா என்னை பத்தி யோசிச்சிகிட்டு இருந்தியா? பின் விளைவுங்கள் பற்றி யோசிக்காமல் வாய் இப்படி உளறியது. உள்மனசில் HOD வந்து போகிறார்.
கோபமே இல்லாமல், "பூச்சி ஒன்னு கடிச்சிடுச்சி" என்றாள் கூலாக. எனக்கு தைரியம் வந்தது. அடச்சே அந்த அதிர்ஷ்டக்கார பூச்சியா நான் இருக்க கூடாதா என்றேன். அந்த பூச்சிய தொடைப்பத்துலையே அடிச்சி சாவ அடிச்சிட்டேன் என்றாள். இனிமேல் நாம் இங்கு இருக்க வேண்டாம் வாங்க அடுத்த Shot க்கு போகலாம்.
ஆண் மயில் தோகை விரித்து ஆடி அதனுடைய காதலியை மயக்கும் என கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் ஒரே Dance தான். அதை ஆடினால் எனக்கு பின்னால் பிணம் வந்து கொண்டு இருக்கிறதென எல்லோரும் நினைப்பார்கள். அதனால் Dance...No Chance...ஆகி விட்டது. சரி...மீண்டும் கவிதையே எழுதி கொடுத்து விடலாமா....."கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று ஒரு சத்தம். என்னவென்று பார்த்தால், என்னுடைய மனசாட்சி என் மீது காரி துப்ப try பண்ணிக்கொண்டு இருந்தது... கவிதை யோசனையும் Cut.
இதற்கு நடுவில், நானும் பார்கவியும், நல்ல நண்பர்கள் ஆனோம். நான் என்ன சொன்னாலும் அவள் HOD யிடம் போட்டு குடுக்கவே இல்லை.

எப்பொழுதும் படிய வாரிய தலையோடு தான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் அன்று, Zig-Zag பின்னல் போட்டு இருந்தாள். என்னால் இதைப்பற்றி அவளிடம் கேட்காமல் இருக்கவே முடியவில்லை. விரிவுரையாளர் ஏதோ சீரியஸ் ஆக விரிவாக எடுத்துரைத்துக்கொண்டு இருந்தார். நான் ஒரு துண்டு சீட்டில் இப்படி எழுதி பார்கவிக்கு அனுப்பினேன்...
National Highways போல இருந்த
உன் கூந்தல்...
கள்ளிப்பாடி பாதை போல
ஆனதன் ரகசியம்
என்ன?

இதை படித்து பார்த்தவள் என்னை பார்த்து சிரித்தாள். என் மனசுக்குள் மத்தாப்பு.
அடுத்து எழுதினேன்...

"நாளை மாலை 5 மணிக்கு Computer Lab க்கு வரமுடியுமா? "
திரும்பி பார்த்து கண்களால் சரி என்றாள்.....அன்று தான் என்னுடைய தலை தீபாவளி. எப்படியும் நாளை, என்னுடைய காதலை சொல்லி விடுவதென இருந்தேன்.
அடுத்த நாள், 4 மணிக்கே நான் Computer Lab ல் ஆஜர். 4:15, 4:30, 4:45 மணி ஓடிக்கொண்டே இருந்தது. 4:55, என்னுடைய இதயம் ஒழுங்கில்லாமல் துடித்து கொண்டு இருந்தது. 5:00, எனக்கு மயக்கமே வரும் போல இருந்தது. 5:15, பார்கவி இன்னும் வரவில்லை. 5:30, பார்கவி வந்து இருக்கவேண்டிய நேரம். 6:00, பார்கவி வரவேயில்லை. நொந்து போனேன். 7:00 மணி வரை காத்திருந்து விட்டு வீடு திரும்பினேன் அறை மனிதனாக.
மறுநாள், என் முன் பார்கவி. நான் பேசுவதற்கு முன், ஒரு துண்டு காகிதத்தை என் கையில் திணித்தாள். பிரித்து படித்தேன். "நேற்று வராததற்கு என்னை மன்னித்து விடு". என் பூரிப்பிற்கு அளவே இல்லை. என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, இப்படி சொல்கிறாள் என்றாள், அவளுக்கு என் மேல் நிச்சயமாக காதல் இருக்கிறதென "நானே" முடிவு செய்து கொண்டேன். அவள் மீது எனக்கு சற்றும் கோபம் இல்லை என்பதை தீர்க்கமாக சொல்ல நினைத்தேன். ஆனால் எப்படி?..காதலில் ஜெயித்து விட்ட அந்த கணத்தில் ஒரு கவி என்னுள் எழுந்தான்... அவன் இப்படி எழுதி கொடுத்தான்...
==============================
உன்னை காற்றில் தேடினேன்,
கணிப்பொறியை கேட்டேன்,
ஆனால் காகிதத்தில் வந்தாய்.
மன்னித்தேன்....,
தாமதமாய் வந்ததனால்
காகிதத்தை!!!!
==============================
இறுதி தேர்வு நடந்து கொண்டு இருந்தது. இன்னும் என் காதலை சொல்லவில்லை. கல்லூரி இறுதி தேர்வு முடிந்த பிறகு ஒரு நாள் எல்லா மாணவர்களும் ஒன்று சேர்வதென முடிவாகி இருந்தது...அந்த நாளை குறித்து வைத்து இருந்தேன்.....காதல் கடிதமும் தயார். அந்த நாளும் வந்தது.... பார்கவி காணவில்லை. சின்ன குழந்தை போல அங்கும் இங்கும் தேடிப்பார்க்கிறேன். ஆள் இல்லை. பவித்ராவிடம் கேட்கிறேன்...பார்கவியா, அவளுடைய பாட்டி செத்து போய்ட்டாங்க அதனால அவ இன்னைக்கி வரல என்றாள்.
ஹும்...நல்ல நாளில் போவதற்கென்றே எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி Reserve ல் இருப்பாங்க போல இருக்கு என்று நினைத்தபடி...நான் எதிர் திசையில் நடந்தேன்.
விதி, இன்னும் என் பார்கவியை என்னுடன் சேர்க்கவில்லை.
இப்பொழுது கணினி பொறியாளனாக ஆகி விட்ட எனக்கு அடுத்த இருக்கையில், பார்கவியை போலவே ஒரு அழகான மங்கை Code அடித்துக்கொண்டு இருக்கிறாள் .
இவளுக்கு ஒரு கவிதை எழுதி தரலாமா...கண்களை மூடி கவிதையை சிந்திக்கிறேன்.... கண்களில் நெருப்பும், கையில் செருப்புமாக என்னுடைய மனைவியின் பிம்பம்..................
காதலிப்பதும், கவிதை எழுதுவதுமான சொர்கத்தை இழந்து விட்டது இப்போது தான் புரிந்தது......!!
பி.கு. : இதைப்படிக்கும் அனைவரும், குறைந்தது 10 நபருக்காவது Fwd., செய்ய வேண்டும். தவறுபவர்களுக்கு கீழ்கண்ட பலன்கள் நிச்சயம் .
திருமணமாகாதவர்களுக்கு : கூடிய விரைவில் திருமணமாகும் ஜாக்கிரதை...
திருமணமானவர்களுக்கு : உங்களுக்கு எந்த தண்டனை கொடுத்தும் இதற்கு மேல் துன்புறுத்தி விடமுடியாது....என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.