சாந்தி வீட்டுக்கார்! - 8

சாந்தி வீட்டுக்கார்! - 8
=======================
மன்னனோட தாத்தாவுக்கு ஒரு பழக்கம் உண்டு.
பேசுறப்போ எப்பவும் அஞ்சி விரலையும் சேர்த்து வச்சி மணிக்கட்ட சுத்திகிட்டே பேசுவாரு.
ரெண்டு சுத்து இடவலமாவும், ரெண்டு சுத்து வலஇடமாவும் சுத்துவாரு.

கடலைமாவு ஒரு கப், மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, ஓமம் இல்லன்னா பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
தேவைக்கு உப்பு, தண்ணி, எல்லாத்தையும் ஒரு  கிண்ணத்துல போட்டு, அதுல தாத்தாவோட கையயும் எடுத்துவச்சிட்டு,
ஒரு கேள்விய கேட்டோம்னா, பதில் சொல்லி முடிக்கிறப்போ பதமா பஜ்ஜிக்கு மாவு கலக்கி குடுத்துடுவாப்புல!!

இன்னும் சாப்ட்டு முடிக்கல நம்ம ஆளு. தயிர்சாதத்துக்கு தொட்டுக்க வெள்ளாட்டுக்கறி குழம்பு....அமிர்தமே இதுக்கு பின்னாடிதான் நிக்கனும்னு நெனச்சி சாப்டுகிட்டு இருக்கான்.

இப்போ தாத்தாவ யாரும் கேள்வி கேக்கல ஆனாலும் கைய சுத்த ஆரம்பிக்கிறாரு!!
அடேய் பேராண்டி, எல்லா பிரச்சனையும் அதுக்கான தீர்வோட தான் ஆரம்பிக்கிது.
நீ அமைதியா என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டு இருந்தாலே போதும். அந்த பிரச்சனையில ஞாயமா  இருந்தவனுக்கு சாதகமா அது தன்னால முடிஞ்சிடும். 
ஆனா அதுவா முடியிறதுக்கு முன்னால நீயா அத முடிக்கிறேன்னு கெளம்புனா, அந்த பிரச்சனை இன்னொரு பிரச்சனைய ஆரம்பிச்சி வச்சிடும்!. நான் சொல்றது புரியிதா கண்ணு?
ஒன்னு மட்டும் புரியிது மன்னனுக்கு. இனிமே சண்டை போட்டுட்டு வந்தா தாத்தா வீட்டுக்கு வரக்கூடாதுன்னு!

எல்லாத்தையும் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தவன் திடீர்னு சத்தமா பேச ஆரம்பிக்கிறான்.
தாத்தா நல்லா கேட்டுக்க, இனிமே நான் சாந்தி கூட வாழ போறது இல்ல!

இன்னும் வாழவே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படி ஒரு முடிவுக்கு வரானேன்னு தாத்தா பதறிப்போறாரு.

எதுக்குடா இந்த முடிவ எடுத்த?
எதுக்கா? அதோட சிநேகிதி வள்ளி அடிக்கடி வீட்டுக்கு வர்றது எனக்கு புடிக்கல. கண்டத சாந்திகிட்ட சொல்லி எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய மூட்டி விடுது. சாந்தி கூட வாழ்ந்தா தான அது வீட்டுக்கு வரும். வாழலன்னா ஏன் வரப்போகுது?

பேரனோட அறிவ பார்த்து மனசுக்குள்ள அழறதா இல்ல வாய்விட்டு சத்தம்போட்டு அழறதான்னு யோசிக்கிறாரு.

என்ன என்னவோ சமாதானம் சொல்லி பாக்குறாரு தாத்தா. ஒரே புடியா நிக்கிறான் தீர்த்து விடுறதுல.
கடைசீயா ஒரு பிரம்மாஸ்திரத்த விட்டுப்பாக்குறாரு.

அடேய், நீ இப்போ வாழமாட்டேன்னு அந்த பொண்ண தீர்த்துவிட்டுட்டேன்னு வச்சிக்க, வச்சி வாழாதவன் குடும்பத்துல பொண்ணு எடுக்க யாராவது முன்ன வருவாங்களா? அப்புறம் உன்னோட தங்கச்சி கெதி என்ன ஆகுறது?

அது வரைக்கும் மோட்டு வளைய  பார்த்துகிட்டு இருந்தவன் தலை, மெல்ல தரைய பாக்க கவுறது.

தாத்தாவோட அஸ்திரம் வேலை செய்யிது.
தங்கச்சின்னா உசுரு அவனுக்கு. நம்மால நம்ம தங்கச்சி வாழ்கை  கெட்டுடக்கூடாதுன்னு தோனிடுச்சி.
மனச மாத்திக்கிறான்!

நாலு விஷயத்தையும் யோசிச்சி முடிவெடுக்குறவனோட மனச மாத்துறது கஷ்டம். குழந்தை மாதிரி நொடிக்கொரு முடிவெடுக்குறவன எடம் பாத்து அடிச்சா மாத்திடலாம்னு தாத்தாவுக்கு தெரியும்!

கெளம்புறான் நாலு மணி வண்டிக்கு...சொந்த ஊருக்கு!

ஊர் வந்துடுச்சி. பஸ்ஸ விட்டு எறங்குனதும் மாதுளம்பழம் வாங்கிக்கறான் சாந்திக்கு புடிக்கும்னு!
கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் தீத்து விடப்போறேன்னு சொன்ன இப்போ பழம் வாங்குறியேடான்னு கேக்க  அங்க வள்ளி இல்லை!

வீடு சேர்ந்தாச்சி.
இவன் வந்துட்டான்னு தெரிஞ்சதும் தோட்டத்துல முருங்கக்காய் பறிச்சிகிட்டு இருந்த சாந்தி ஓடி வருது.
கண்ணு கலங்கி இருக்கு...முருங்கைப்பூ கண்ல விழுந்தப்போ கலங்குனதவிட இப்போ அதிகம் கலங்குது இவன பார்த்த சந்தோஷத்துல.

எங்கப்போன, எதுக்கு போன, எதையும் கேக்கல சாந்தி. கேட்ட மொத கேள்வி...தோசை சுடவா?

தலைய ஆட்டுறான் மேலுக்கும் கீழுக்கும்.

எண்ணெய்ய அளவா ஊத்தி மெதுமெதுன்னு சுட்ட தோசை ரொம்ப புடிக்கும் அவனுக்கு.

வழக்கமா தோசை வார்க்குறதுக்கு முன்னாடி எண்ணெய்ல தோய்ச்ச துணிய கல்லுல தேய்ச்சிட்டு தோசை வார்பாங்க சாந்தி வீட்டுல.
பாட்டி உசுரோட இருந்தப்போ ஒரு நாள்... "எண்ணெய் விக்கிற வெலைல இதுக்கு போயா அத செலவழிக்கிறது? அதுக்கு பதிலா வெங்காயத்த பாதியா அறிஞ்சி அத கல்லுள்ள தேச்சி தோசைய சுடுங்க" ன்னு சொல்லிட்டு போய்சேர்ந்துடுச்சி  பாட்டி... இன்னைக்கி வெங்காயம் விக்கிற வெலை தெரியாம!
தெரிஞ்சி இருந்தா, "அடியே சாந்தி, தோசைக்கு எண்ணைய ஊத்து, வெங்காயத்த பீரோல வையி. உம்புள்ளை கல்யாணத்துக்கு வித்து தங்கம் வாங்கிக்கலாம்னு!" ன்னு சொல்லி இருக்கும்.

சாப்ட்டு முடிச்சான் தோசைய அவனுக்கு புடிச்ச மாதிரி.
கைகழுவ எழுந்துக்குறான்... அதே நேரம் வாசல்ல சத்தம் கேக்குது..
யாருன்னு பார்த்தா.... வள்ளி!!!
மூனே மூணு தோசை சாப்பிடுற நேரத்துல தகவல் போய்டுச்சி வள்ளிக்கு!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு

No comments:

Post a Comment