சாந்தி வீட்டுக்கார்! - 7
====================

பருவத்துல, பையனுங்களுக்கு வர காதல் வானவில் மாதிரி பல நிறத்துல இருக்கும்.
ஒரே நேரத்துல ஏழு பொண்ணுங்கள காதலிக்கிறவனும் இருப்பான், ஒரே பொண்ண ஏழு வருஷம் காதலிச்சி கல்யாணம் பண்ணி தன்னோட காதல் வெற்றியா தோல்வியான்னு தெரியாதவனும் இருப்பான்!

ஆனா பெண்களோட காதல், பொதுவா ஒரே மாதிரி இருக்கும். அது அவங்ககிட்ட இருக்க தாய்மையின் இன்னொரு பரிணாமம். அதனாலதான் காதலியோட அன்பு பல சந்தர்ப்பங்கல்ல அம்மாவோட அன்பு மாதிரியே இருக்கும்.

"வெளில போறப்போ கிழிஞ்ச சட்டையா போடுவ?" ன்னு கேக்குறதுல இருந்து "தலைக்கு எண்ணெய் தடவுறதுதான " ன்னு கண்டிக்கிறது வரைக்கும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி (அன்பை) பொழிவாங்க.
ஏற்கனவே அம்மாகிட்ட கெடச்சது காதலிகிட்டயும் பார்த்ததும் நமக்கு வாழ்க்கை முழுக்க இப்படியான அன்பு தான் பொழியப்போகுதுன்னு நம்ம ஆளு நெனச்சிக்குவான்.
அதனாலதான் கல்யாணத்துக்கப்புறம்  மனைவியோட "அன்பை" பார்த்து அதிர்ச்சி அடையிறது!

சாந்தியும் மன்னனும் ஒரே பள்ளிக்கூடம் ஆனா வேற வேற வகுப்பு. சத்தமே போடாம சாந்தி மனசுக்குள்ள வந்துட்டான் மன்னன்.
சாந்தியோட மனசுக்குள்ள வேதியியல் மாற்றம் நடக்குது.
இது தெரியாம இயற்பியல் வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருக்காரு.
"இயற்பியல் என்பது  பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்படும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்"
சம்மந்தமே இல்லாம நம்மள எதுக்கு இந்த நேரத்துல இழுக்குறாருன்னு பேரண்டம் நெனைக்கிது!
அத பத்தி யாரும் கவலைப்படல... பெல் அடிச்சதும் சாப்புட போய்ட்டாங்க.

மரத்தடி தான் சாப்பிடுற எடம். எல்லாரும் டப்பாவ தெறந்துட்டாங்கசாந்தியும் தெறக்குது. இட்லி கடை நடத்துறவங்க பொண்ணு என்ன எடுத்துகிட்டு வருமோ அது. இட்லி!
திங்கள்ள இருந்து வெள்ளி, அஞ்சி நாள்ல மூணு நாள் இட்லி. ரெண்டு நாள் இட்லி உப்புமா. விதவிதமா?! சாப்டா தான் சாந்திக்கு புடிக்கும்!
சாந்தியோட சிநேகிதி வள்ளி எதிர்ல உக்கார்ந்து இருக்கு. அதோட அப்பா கோயில் மடப்பள்ளி வேலைபாக்குறாரு. அதோட டப்பால...அதே தான்...புளிசாதம்.

இட்லிக்கு சட்டினி, புளிசாதத்துக்கு அதுல இருக்க மொளகா. விருந்து நடக்குது. தலைக்கு மேல, மரத்துல காக்கா உக்கார்ந்து கறையிது.
தண்ணி வச்சிக்காம கூட சாப்டுடலாம். ஆனா தலைக்கு மேல காக்காவ வச்சிகிட்டு சாப்ட முடியாது!
சாந்தி அத "ச்சூ" ன்னு வெரட்டவும் காக்காவுக்கு முன்னாடி மன்னன் பறந்து போறான் சாந்திக்கு பின்னால இருந்து.
அவன பார்த்ததும் சாந்தியோட கண்ணு அவன் மேலேயே நின்னுடுச்சி. எங்க எதுக்கு ஓடுறான்னு தெரியல.

வள்ளி கேக்குது, என்னடி அங்கேயே பார்த்துகிட்டு இருக்க?
ஒன்னும் இல்ல.
சாப்புடு.
ம்!

குனிஞ்சி இட்லிய பார்த்தா சாப்புட தோனல. மறுபடி மன்னன பாக்கணும் போல இருக்கு.
மன்னன பார்த்தா வள்ளி என்ன எதுன்னு கேக்கும். என்ன பண்ணலாம். உதிக்கிது ஒரு உபாயம்.

" வள்ளி அங்க பாருடி நாம தொரத்துன காக்கா அந்த மரத்துல போய் உக்கார்ந்துடுச்சி" ன்னு இல்லாத காக்காவ மன்னன் போன தெசைல காட்டுது சாந்தி.காட்டிட்டு மன்னன பார்த்துகிட்டு இருக்கு.
அமாம்டி!! அது இன்னைக்கி முழுக்க இங்கயேதான் சுத்தும் போலிருக்கு ன்னு சொல்லி சாந்தி சொன்னத அப்படியே நம்புது வள்ளி.
வள்ளிய கல்யாணம் பண்ணிக்கப்போறவன் குடுத்துவச்சவன்னு அங்க இருந்த காத்து தெரிஞ்சிகிட்டு நகர்ந்துடுச்சி.

அந்த வாரம் சனி ஞாயிறு சாந்தியோட குடும்பம் பழனிக்கு போய்ட்டாங்க. பிரார்த்தனை எல்லாம் முடிஞ்சி கடைதேருவுல இருக்க படக்கடைங்கள வேடிக்கை பார்த்துகிட்டு வராங்க சாந்தியோட அம்மா. திடீர்னு ஒரே சந்தோஷம் அவுங்க முகத்துல.
சாந்தி கண்ணு. இங்க பாத்தியா இந்த சாமி போட்டாவ. இத புஸ்தகத்துல வச்சிக்கிட்டா நல்லா படிப்பு வரும் வாங்கிக்க. அப்பா கிட்ட காசு கேளு.

சாந்திக்குள்ள ஒரு மின்னல் அடிக்கிது. "மன்னனுக்கு இது கண்டிப்பா தேவைப்படும். அவனுக்கும் வாங்கிக்கலாம்
சரிம்மா. ரெண்டு வாங்கிக்குடு.
ரெண்டு எதுக்குடி?
எனக்கொன்னு. வள்ளிக்கொன்னு!
சரி வாங்கிக்க.

பொய் சொல்லி வாங்கியாச்சி.
இந்த படம் எனக்கு. இது மன்னனுக்குன்னு தனித்தனியா வச்சிகிடுச்சி.
மன்னனுக்காக வச்ச சாமிக்கே பயம் வருது. நாம கூட இருந்தாலும் அவனுக்கு படிப்பு வரப்போறது இல்ல.
எதுக்கு இந்த பொண்ணு என்னோட பேர  கெடுக்கநெனைக்கிதோ தெரியலையே!

அடுத்தது காரப்பொறி கடைக்கு முன்னால நிக்கிது குடும்பம். ஒரு படி வாங்கி ஆளுக்கு ஒரு கைப்புடி எடுத்து சாப்பிடவும் சாந்திக்கு மன்னனுக்கு அத குடுக்கனும்னு ஆசை வந்துடுச்சி.

அத்தன வருஷத்துக்கு முன்னால சாந்தி நெனச்சது இன்னைக்கி பொறைக்கு ஏறுது மன்னனுக்கு.
சாந்திகிட்ட சண்டை போட்டுட்டு தாத்தா வீட்டுக்கு வந்துட்டான்ல. வெள்ளாட்டுக்கறி விருந்து வச்சிட்டாரு தாத்தா.

மன்னன்னா அவருக்கு உசுரு. நல்ல மனுஷன்.
அடுத்த தலைமுறைக்கு ஆஸ்தி மட்டும் குடுத்துட்டு போக கூடாது அறிவையும், அனுபவத்தையும் குடுத்துட்டு போகணும்னு நெனைக்கிறவரு.

தனக்கு முடிவு நெருங்கிடுச்சின்னு தெரிஞ்சிடுச்சி அவருக்கு. அதனால வந்தவன் மண்டைக்குள்ள, தான் இதுவரைக்கும் தெரிஞ்சிகிட்டது அத்தனையையும் ஏத்த முயர்ச்சிக்கிறாரு

அடேய் பேராண்டி நல்லவனுக்கு எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரக்கூடாதுடா.    
இந்த உலகத்துல எதுல வேணாலும் லாபநஷ்டம் பாக்கலாம். ஆனா நல்லவனா இருக்குறதுல மட்டும் பாக்கவே கூடாது.
ஏன்னா நல்லவனா இருந்தா உனக்கு கெடைக்கிறது மனநிம்மதி ஒன்னு தான். அது இருக்கும்போது இருக்குறது தெரியாது. போன அப்புறம் தான் தெரியும் இப்போ இல்லைன்னு. அதனால நல்லவனா இருந்து என்ன லாபம்ன்னு நெனச்சி கெட்டவனா ஆயிடாத!

தாத்தா சொன்னத காது கேட்டுக்குது, கை கரண்டிய தூக்குது. கண் அடுத்து ரசமா தயிரான்னு பாக்குது. மொத்ததுல விஷயம் மூளைக்கு போகல. தாத்தா இன்னொரு ஜென்மம் எடுத்துகிட்டு வந்து சொன்னத மறுபடி சொன்னாதான் போலிருக்கு!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு

No comments:

Post a Comment