துரும்பு

அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பவன் கடவுள் மட்டும் இல்லை அவனும் தான்.
நண்பர்கள் என்று நான்கு பேர் இருந்தால், அதில் ஒருவனாக அவன் நிச்சயம் இருப்பான். அவன், சக நண்பர்களுக்கு மத்தியில் அடிமையாக இருப்பவன். வாய் திறந்து எதை சொன்னாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆட்படுகிறவன். எதற்கும் உதவாத ஒரு துரும்பை போல பாவிக்கப்படுகிறவன். நானும் அவனை பார்த்து இருக்கிறேன். இதோ அவன் உங்கள் முன்னாள்.

நாங்கள் நான்கு பேர் நண்பர்கள். எங்களில் "அவன்" - மகேஷ் (பெயர் மாற்றப்படவில்லை). மகேஷை நான் முதலில் சந்தித்தது, கல்லூரியின் முதல் நாள் தான். அன்று பல மாணவர்களின் பெற்றோரும் வந்து இருந்தனர். அனைவருக்கும் கல்லூரியிலேயே உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் சாப்பிட்டு முடித்து விட்டு வந்து கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு பின்னால் இருந்து ஒரு பெருங்குரல் 5 கிலோமீட்டருக்கு கேட்கிறமாதிரி "நைனா போன் சேஸ்தாவா நைனா" . யாருடா அவன் STD ய Local call ல பேசுறவன்னு திரும்பி பார்த்தா நம்ம மகேஷ். கல்லூரி வாசலில் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவனுடைய அப்பாவை சாப்பிட்டாச்சா என்று கேன்ட்டீன் வாசலில் இருந்தே விசாரித்துக்கொண்டிருக்கிறான். அவனை அப்பொழுதே குறித்து வைத்துக்கொண்டேன். 

மகேஷ், எங்களில் "அவனாக" ஆனதற்கு மகேஷ் தான் காரணம்.
ஒரு நாள் கல்லூரியில் ஒரு Form கொடுத்து அதை Fillup செய்ய சொன்னார்கள். அதில் Sex : Male / Female என ஒரு Column இருந்தது. மகேஷ் சீரியஸாக என்னிடம் வந்து, மச்சி இதுல எதடா செலக்ட் பண்ணனும் என கேட்டான். நடுவுல இருக்க "/ "ஐ டிக் அடிடா என்றேன். சரி என சொல்லி டிக் அடித்தான். இவ்வளவு நல்லவனாடா நீ என நினைத்துக்கொண்டேன். இது தான் மகேஷிற்கு "அவனாக" ஆனதன் முதல் படி.
இரண்டாவது படி, சோறு.
அவன் சாப்பிடுவதை பார்த்தால் மனிதனின் குணம் ஒன்று கூட அதில் தெரியாது. பேய் தீனி தின்பான். ஆந்த்ரா மெஸ்ஸிர்க்கு போனால், ஏதோ அன்றுதான் வாழ்கையின் கடைசி நாள் என்பது மாதிரி சாப்பிடுவான். இனி ஒரு வாரத்திற்கு சாப்பிடமாட்டான் என நினைப்போம். ஆனால் அடுத்த நாளும் அதே Performance கொடுப்பான்.
ஒரு நாள் இவனுடன் ஒரு கல்யாணத்திற்கு சென்றேன். மணமக்களை வாழ்த்திவிட்டு, போன வேலையை கவனிக்க சென்றோம். இலையை பார்த்த உடனே மகேஷ் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு எரிந்தது. தின்றான் தின்றான் தின்றுகொண்டே இருந்தான். நாங்கள் இருந்த பந்தியில் அனைவருமே முடித்து விட்டு எழுந்து சென்றுவிட்டார்கள். நான் இவனுடன் சென்ற பாவத்திற்காக உடன் அமர்ந்து இருந்தேன். இப்போது தான் வத்தகுழம்பிற்க்கு வந்திருக்கிறான். இலை எடுப்பவர்கள் இவனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக வத்தகுழம்பை முடித்தான். பந்தி பரிமாறுபவர், அடுத்தது என்ன சார்? ரசமா மோரா என கேட்டார். இவன் சாம்பார் என்றான்!!!. மகேஷை தவிர அங்கிருந்த எல்லோருக்கும் தூக்கி வாரிபோட்டது. இனி என் வாழ்க்கையில் இவனுடன் சாப்பிட போக கூடாது என முடிவெடுத்தேன்.

இத்துடன் முடியவில்லை அவனின் பிரதாபம். கல்லூரி முடித்து, நாங்கள் ஒரு குழுவாக சென்னையில் தங்கி இருந்த நேரம், ஒரு நாள், அவனுடைய மாமா அவனை பார்க்க வரப்போவதாக சொன்னான். எட்டு மணிக்கு வரவேண்டிய மாமா, பத்து மணி ஆகியும் வரவில்லை. என்னுடைய சக நண்பன் ஒருவன் பால்கனியில் நின்றுகொண்டு கிழே பார்த்துக்கொண்டிருந்தான். மகேஷ், உங்க மாமா வந்துட்டாருடா. உன்னை கிழே கூப்புடுறாரு என்றான். உடனே மகேஷ், "நைனா ஒஸ்தான் நைனா" என்று இங்கிருந்தே கத்தினான். கிழே கிளம்ப எத்தனித்த அவனை நிறுத்தி, டேய் மாமா னு சொன்ன, நைனா னு கூப்பிடுற என்றேன். குழந்தைல இருந்தே அப்படி பழகிடுச்சி, எங்க மாமாவ மட்டும் இல்லை, எங்க ஊர்ல இருக்க எல்லாரையுமே நான் அப்படி தான் கூப்பிடுவேன் என்றான்!!!!. கண்ணை கட்டியது எனக்கு.
பாரதியார் சொன்னது போல, காலை எழுந்த உடன் படிப்பான். The Hindu. முதல் பக்கம், முதல் வரியில் இருந்து ஆரம்பித்து, கடைசி பக்கத்தின் கடைசி புள்ளியில் முடிப்பான். எடிட்டர் கூட அப்படி படித்து இருக்க மாட்டார். வரி விளம்பரத்தை கூட விடாமல் படித்து விடுவான்.இதிலென்ன பிரமாதம் என்கிறீர்களா? அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. இந்த விஷயம் அவனை தவிர எல்லோருக்கும் தெரியும். A விலிருந்து Z வரை தெரிந்தாலே ஆங்கிலம் தெரிந்த மாதிரி தான் என்பது அவன் எண்ணம்.
உலககோப்பை கால்பந்தாட்டம் நடந்துகொண்டிருந்த சமயம், இறுதி ஆட்டத்திற்கு யார் தகுதி பெறுவார்கள் என எல்லோரும் அளசிக்கொண்டிருந்த நேரம். எங்கிருந்தோ வந்தான் மகேஷ், என்னடா மேட்டர் என்றான். சொன்னோம். உடனே அவன், Finals க்கு, Brazil and Germany தான் போகும். ஆனா Cup, கண்டிப்பா Argentina க்கு தான் எழுதி வச்சிக்கோங்க என்றான்.!!!

இப்படியான பல்வேறு காரணங்களால், மகேஷ், "அவன்" ஆகி விட்டான்.

ஒரு நாள் கல்லூரி நண்பன் ஒருவன் எங்களை பார்க்க வந்து இருந்தான். எங்கடா மகேஷ் என்றான். அவன் Toilet கழிவிகிட்டு இருக்கான்டா என்றேன். இரண்டு நிமிடம் பொறுத்து மகேஷ் பாத்ரூம் ல் இருந்து டூத் ப்ரஷ்ஷோடு வெளியில் வந்தான். வந்த நண்பன், என்னடா பண்ணிக்கிட்டு இருந்த உள்ளே? பல் தேய்ச்சிகிட்டு இருந்தேண்டா என்றான் மகேஷ். வந்தவன் என்னைப்பார்த்து முறைத்தான். நானும் அததாண்டா உனக்கு புரியிற மாதிரி சொன்னேன் என்றேன்.

என்றைக்கும் இல்லாமல் ஒரு நாள், மகேஷ் அவனுடைய குடும்ப கதையை சொல்லிக்கொண்டு இருந்தான். அவனை ஒரு வார்த்தைக்கு மேல் பேசவிடாத நாங்கள் அன்று அவனை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தோம். எப்படி இவனை நிறுத்தலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில், விதி அவனை இப்படி பேச வைத்தது.
எங்க பாட்டிக்கு, பதினாறு வயசுல கல்யாணம் ஆச்சி மச்சி. அவங்களோட பதினெட்டு வயசுல எங்க தாத்தா செத்து போய்ட்டாரு. ரெண்டு வருஷம் தாண்டா பூவோடயும் பொட்டோடையும் இருந்தாங்க.
அப்படியாடா உங்க பாட்டிக்கு எத்தன குழந்தைங்கடா என கேட்டேன்.
மூணு மச்சி என்றான்.
அதெப்படிடா ரெண்டு வருஷத்துல மூணு குழந்தை?
எங்க தாத்தா சிங்கம்டா.
ஓ! மனுஷன் இல்லையா...சிங்கமா? அப்போ ரெண்டு வருஷத்துல மூணு குட்டி ரொம்ப கம்மியாச்சே மச்சி என்றேன்!!!.

இப்படி இருந்த நாங்கள், கால சக்கரத்தில் அகப்பட்டு ஆளுக்கொரு மூலையாக பிரிந்து விட்டோம்.
ஐந்து வருடங்கள் கழிந்தன.....

என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு Phone செய்து, மச்சி இன்னைக்கி நைட் மகேஷ் டிவில வரானாம்டா என்றான். உடனே நான், எதுக்குடா? சாராயம் காய்ச்சி மாட்டிக்கினானா என்றேன். தெரியலடா டிவி புரோக்ராம் பாரு என்று சொல்லி இணைப்பை துண்டித்தான்.
இவன் எதுக்கு டிவி ல வரான். வர வர எவனெவன் தான் டிவில வரதுனு இல்லாம போய்டுச்சி. அன்று இரவு, அட நிஜம் தான். மகேஷ் டிவி ல பேசுறான்.
அவன் பேசியதில் இருந்து, அவன் ஒரு பெரிய சாதனை படைத்தது தெரிந்தது எனக்கு.
Wallace Stevens Award for English Literature ஐ வாங்கி இருக்கிறான்.
இவனா அவன்? என்னால் நம்பவே முடியவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களுடைய நண்பர்கள் பற்றி சொல்லுங்கள் என கேட்டார். என்னைப்பற்றி ஏதாவது சொல்லிவிடப்போகிறான் என பயந்துகொண்டிருந்த நேரத்தில் சொல்லியேவிட்டான்.
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் என்னை எப்போதும் கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு, நான் குறைந்தது மனிதனாகக்கூட தெரிந்தது இல்லை. ஆனால், அது தான் என்னை இந்த சாதனை படைக்க தூண்டியது. அவர்கள் என்மீது எரிந்த ஒவ்வொரு கல்லையும் வைத்து கோட்டையை கட்டிக்கொண்டேன். அவர்கள் என்மீது எரிந்த ஒவ்வொரு ஈட்டியையும் என்னை செதுக்கிக்கொள்ள ஒரு உளியாக பயன்படுத்திக்கொண்டேன் இந்த நேரத்தில், என்னுடைய அந்த நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றான்.
என்னை யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. இப்படி ஒருவனையா அப்படி கேவலப்படுத்திவிட்டோம் என நினைத்து, என்னையே எனக்கு பிடிக்கவில்லை. சரி போனது போகட்டும் இனி யாரையும் துரும்பை போல கேவலமாக நினைக்க கூடாது. கேலி கிண்டல் எல்லாத்தையும் இதோடு மூட்டை கட்டிவிடவேண்டும் என முடிவெடுத்தேன்.
அந்த நேரம் பார்த்து பக்கத்து அறையில் தங்கி இருக்கும் பையன் என்னிடம் வந்து,
அண்ணே அண்ணே Volley Ball ல சாதிச்ச சதிஷ் சிங் வர்மா மாதிரி இன்னொருத்தர் எப்போண்ணே வருவாரு என கேட்டான்.
அதை சதிஷ் சிங் வர்மாவோட அப்பாவ தாண்டா கேக்கணும் என்றேன்.
ஹும் என்னை திருத்தவே முடியாது...!

6 comments:

  1. First part of the story is very comedy because of Mahesh Actions.In second part we learnt 2 lessons
    1)By seeing onces external apperance and action we cant judge them.They may have lot of talents in them.
    2)we should not hurt others by commenting them.

    Your creativity is excellent.
    Waiting for your next creativity.

    ReplyDelete
  2. Machi yaruda antha Mahesh?? nejamaave TV la vanthuttaanaada?

    ReplyDelete
  3. அசோக்கு ... உங்களுக்குள்ள 4 பாரதிராஜா ... 5 பாலச்சந்தர் ... 3 பாலுமகேந்திரா .... 7 பாக்கியராஜ் இருக்காங்களே ... இத்தன நாட்களா
    தெரியாம போச்சேப்பா எங்களுக்கு ....
    வாழ்த்துகள் அசோக்கு ... பொங்கி எழுங்க எரிமலையாய் ...

    ReplyDelete
  4. Hi Priya,
    Thanks for the comments!

    ReplyDelete
  5. Senthilkumar,
    தயவு செய்து பதறாதீங்க! எல்லாம் சொம்மனாங்காட்டியும் தான்.!
    :)

    ReplyDelete
  6. Mr. Prem,
    நான் ஏதோ காமெடி பண்ண முயற்சி தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்....ஆனா நீங்க பின்றீங்களே!!!
    :)

    ReplyDelete